நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக மேலும் 7 வழக்குகள் பதிவு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி. லோகுர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில், நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான 10ஆவது விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான விசாரணை நிலவரம் குறித்த தகவல் இடம்பெற்றிருந்தது. அதில் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அமைப்பிடம் இருந்து முதலில் 55 முதல்தகவல் அறிக்கைகள் வந்தன. இதன்மீது அமலாக்கத் துறை வழக்குகள் பதிவு செய்தது.
வழக்கு விசாரணை நிலவர 9-ஆவது அறிக்கையைத் தொடர்ந்து, சிபிஐ அமைப்பிடம் இருந்து மேலும் 7 முதல் தகவல் அறிக்கைகள் அனுப்பப்பட்டன. இந்த முதல் தகவல் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறை மேலும் 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுதவிர்த்து, ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கு எதிராக புகார் பதிவது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறையிடம் அடுத்த விசாரணை நிலவர அறிக்கையை டிசம்பர் மாதம் 4-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத் துறை அமைப்புகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
முன்னதாக, நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா முட்டுக்கட்டை போட முயன்றதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அமைத்தது. அப்போது ரஞ்சித் சின்ஹா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் அல்லது ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை தனது அனுமதியின்றி இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.