விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மக்களுக்கு ஆற்றும் சேவையே இறைவனுக்கு ஆற்றும் உண்மையான சேவை: பிரதமர் மோடி

மக்களுக்கு ஆற்றும் சேவையே இறைவனுக்கு செய்யும் உண்மையான சேவையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
Updated On :20 அக்டோபர் 2017, 8:13 pm

DIN

மக்களுக்கு ஆற்றும் சேவையே இறைவனுக்கு செய்யும் உண்மையான சேவையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த அவர், அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர், கேதார்புரியில் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்துவது, மந்தாகினி, சரஸ்வதி ஆற்றின் கரைகளில் தடுப்புச் சுவர் கட்டுவது, கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலை அமைப்பது, 2013-ஆம் ஆண்டு நேரிட்ட பேரிடரின்போது சிதிலமடைந்த ஆதி குரு சங்கராச்சார்யரின் கல்லறையை மறுகட்டுமானம் செய்வது என 5 மறு கட்டுமானத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 
இந்த மறுகட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் பொருள்செலவு மிகுந்த, லட்சியத் திட்டங்களாகும். எனினும் நிதி பற்றாக்குறை இல்லாமல், குறித்த காலத்தில் பணிகள் நிறைவேற்றப்படும்.
இந்த மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். அப்போது, குஜராத் முதல்வராக இருந்த நான், இங்கு வந்து நிலைமையை நேரில் பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.
மேலும், கேதார்நாத் பகுதியில் மறுகட்டுமானப் பணிகளை செய்து கொடுப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தேன். அதற்கு அப்போதைய விஜய் பகுகுணா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஊடகங்களில் வெளியானதும், தில்லியில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, உத்தரகண்ட் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. அதையடுத்து எனது கோரிக்கையை உத்தரகண்ட் அரசு ஏற்கவில்லை. மேலும், குஜராத் அரசின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என்றும் அப்போதைய முதல்வர் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றேன்.
எனினும், கேதார்நாத்தில் மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை பாபாவின் மகனை(மோடி) தவிர வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்று பாபாவே (சிவன்) முடிவு செய்துவிட்டார்.
நான் தீவிர அரசியலில் களம் இறங்குவதற்கு முன் கேதார்நாத் அருகில் உள்ள குருசாட்டியில் சிறிது காலம் தங்கியிருந்தேன். அந்த நாள்கள் இப்போது எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனது எனது வாழ்வின் முக்கியமான தருணங்கள் ஆகும்.
எனது வாழ்நாள் முழுவதையும் பாபாவின் காலடியிலேயே கழிக்க வேண்டும் என்று அப்போது நினைத்திருந்தேன். ஆனால், பாபாவின் விருப்பம் வேறு மாதிரியாக இருந்தது. தனது காலடியிலேயே நான் வாழ்நாளைக் கழிப்பதை பாபா விரும்பவில்லை. 125 கோடி மக்களுக்கு ஆற்றும் சேவையே, இறைவனுக்கு ஆற்றும் உண்மையான சேவை என்று எண்ணிய பாபா, என்னை நாட்டுக்கு சேவையாற்ற அனுப்பி வைத்து விட்டார். நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான வலிமையை இந்த கோயில் எனக்குத் தருகிறது என்று பிரதமர் மோடி கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.