

"நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய 500-க்கும் மேற்பட்ட ரயில்களின் பயண நேரம் அடுத்த மாதம் முதல் 2 மணிநேரம் வரை குறைய உள்ளது. இது தொடர்பான புதிய கால அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும்' என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இம்மாதத் தொடக்கத்தில் பிறப்பித்த உத்தரவின்படி ரயில்வே நிர்வாகம் புதுமையான நேர அட்டவணையை உருவாக்கியுள்ளது. அதன்படி, தற்போது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ரயில்களின் பயண நேரமானது 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை குறையும். இந்தப் புதிய அட்டவணையானது ஒவ்வொரு ரயில்வே மண்டலத்துக்கும் 2 முதல் 4 மணி நேரத்தை பராமரிப்புப் பணிக்காக வழங்குகிறது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது இருக்கும் ரயில் என்ஜின்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே எங்கள் திட்டமாகும். அதை இரண்டு வழிகளில் செயல்படுத்தலாம். அதாவது, ஒரு ரயில் திரும்பி வருவதற்காக எங்கோ ஓரிடத்தில் காத்திருக்கிறது என்றால் அதை அப்பகுதிக்கு அருகில் உள்ள ஓரிடத்திற்குச் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிய அட்டவணைப்படி சுமார் 50 ரயில்கள் இவ்வாறு இயங்கும். 51 ரயில்களின் பயண நேரமானது ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உடனடியாக குறையும். இதன்படி படிப்படியாக 500-க்கும் மேற்பட்ட ரயில்களின் பயண நேரம் குறையும் என்றார் அந்த அதிகாரி.
ரயில்வே நிர்வாகம் தற்போது ரயில்களின் இயக்கம் தொடர்பான துறை சார்ந்த ஆய்வைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 50 விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றப்படும். இது, தற்போதுள்ள ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிக்கும் ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றார் அந்த அதிகாரி.
இதன்படி, போபால்-ஜோத்பூர் விரைவு ரயில் வழக்கத்தை விட 95 நிமிடங்கள் முன்கூட்டியே செல்லும். அதேபோல், குவாஹாட்டி-இந்தூர் சிறப்பு ரயில் தனது 2,330 கி.மீ. பயண தூரத்தை வழக்கத்தை விட 115 நிமிடங்களும், காஜிபூர்- பாந்த்ரா டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தனது 1,929 கி.மீ. பயண தூரத்தை 95 நிமிடங்களும் முன்கூட்டியே எட்டி விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.