'நவம்பர் 8' கறுப்புப்பண ஒழிப்பு தினமா? கறுப்பு தினமா? மல்லுகட்டும் பாஜகவும்-18 எதிர்கட்சிகளும்!

நவம்பர் 8-ந் தேதி கறுப்புப்பண ஒழிப்பு தினமாக அனுசரிக்க பாஜக முடிவுசெய்தது. ஆனால் அதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
'நவம்பர் 8' கறுப்புப்பண ஒழிப்பு தினமா? கறுப்பு தினமா? மல்லுகட்டும் பாஜகவும்-18 எதிர்கட்சிகளும்!
Updated on
2 min read

கடந்த வருடம் நவம்பர் 8-ந் தேதியை நாட்டு மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். தடீரென தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் அச்சமயம் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

நாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த பண மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏற்றுக்கொள்ளும்படியும் மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், அடுத்த 50 நாட்களுக்குள்ளாக மொத்த கறுப்புப்பணத்தையும் கண்டறிந்து மீட்டு விடுவதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து விடுவதாகவும், இல்லையெனில்... பதவி விலகிவிடுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. தங்களிடம் உள்ள பணமதிப்பீட்டுக்கு உள்ளான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அச்சமயம் பெரிய அளவிலான சில்லரை தட்டுபாடு நிலவியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு திணறினர். ஏ.டிஎம் வாசல்களில் தவம் கிடக்கும் நிலையும் ஏற்பட்டது.

ஒரு நாட்டின் பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு சாமானியனின் வாழ்வாதாரத்தை பதம் பார்த்தது. அதற்குள்ளாக டிஜிட்டல் இந்தியா சேவையை துவக்கினார். இதில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்தனைகளை ஊக்குவித்தார். சாமானியக்கு ஏற்பட்ட இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் இதுவரை கறுப்புப்பணம் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது என்பது கேள்விக்குறிதான்.

இந்நிலையில், இந்த பண மதிப்பீட்டு விவகாரம் அமல்படுத்தப்பட்டு ஒராண்டு நிறைவடையப்போகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக நவம்பர் 8-ந் தேதியை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

நவம்பர் 8-ந் தேதியுடன் பண மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. எனவே இந்த தினத்தை கறுப்புப்பண ஒழிப்பு தினமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கொண்ட பிறகு பலர் முறையாக வருமானவரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் நோக்கம் பொருளாதாரத்தை சீர்குலைப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், முறையற்ற பணப்பரிவர்தனைகளை ஒழுங்குபடுத்துவது தான் இதன் குறிக்கோள். அதிலும் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முறையற்ற பணப்பரிமாற்றம் ஒடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இதுவரை ஆட்சியில் இருந்தபோது கறுப்புப்பணத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. ஆனால் அவர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர் என்றார்.

இந்நிலையில், நவம்பர் 8-ந் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. 

இதுகுறித்து நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அச்சமயம் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் ஷரத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தேரேக் ஓ. ப்ரியன் மற்றும் சிலர் இருந்தனர். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நாட்டிலேயே பிரதமரால் அறிவிக்கப்பட்ட திட்டம் 135 முறைக்கும் மேல் மாற்றியமைக்கப்படும் நிலைமை இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த திட்டம் ஒரு தோல்வி என்பதை நிரூபித்துவிட்டது. இந்த கறுப்பு தின நடவடிக்கைக்கு 18 எதிர்கட்சிகளும் ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

பண மதிப்பீட்டு விவகாரம் தான் மிகப் பெரிய ஊழல். இதனை முதன்முதலில் இந்த நாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தான் சுட்டிக்காட்டினார் என்று அக்கட்சியின் ஓ. ப்ரியன் தெரிவித்தார்.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஓ. ப்ரியன், சிபிஐ கட்சியின் டி. ராஜா எம்.பி., திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சதீஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com