எதிர்பார்த்ததைவிட ஜிஎஸ்டி சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது

சரக்கு - சேவை வரியானது (ஜிஎஸ்டி) எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகவே நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்ததைவிட ஜிஎஸ்டி சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது
Published on
Updated on
1 min read

சரக்கு - சேவை வரியானது (ஜிஎஸ்டி) எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகவே நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண துரிதமான முறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் ஜிஎஸ்டி சட்டத்தை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்தது.
இந்த புதிய வரிவிதிப்பு முறையானது அமலுக்கு வந்து ஏறத்தாழ 3 மாதங்களான நிலையில், அதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூகத்தில் நிலவுகின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வசூல் நடவடிக்கைகளில் ஓரிரு பிரச்னைகள் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஜேட்லி பேசியதாவது:
வாராக் கடன்களை வசூலிப்பதும், கடன் சுமையில் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்வதும் சவால் நிறைந்த பணிகளாக உள்ளன. குறிப்பாக கடன் சுமை கொண்ட சொத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தாலும் சரி; அதனை மிகத் துரிதமாக மத்திய அரசு முன்னெடுக்கப் போகிறது. இதற்காக இந்திய வங்கித் துறையை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பொருத்தவரை அதன் வாயிலாக பல்வேறு பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் நாட்டிலும், நிதிச் சூழலிலும் அது எதிரொலித்துள்ளது.
ஜிஎஸ்டி சட்டத்தை எடுத்துக் கொண்டால், இப்போதுதான் அது ஆரம்ப நிலையை அடைந்துள்ளது. எண்ணற்றோர் ஜிஎஸ்டி வரம்புக்குள் தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விரைவில் மிகப்பெரிய எண்ணிக்கையை அது எட்டிப் பிடிக்கும்.
மொத்தத்தில், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே ஜிஎஸ்டி சட்டம் நடைமுறையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான புதிய வரைமுறைகளானது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார் ஜேட்லி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com