தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி திடீர் ராஜிநாமா இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்தவர்

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் படேல் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமாவுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.

News image
Updated On :26 செப்டம்பர் 2017, 8:01 pm

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் படேல் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமாவுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்ற ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், 'நீதிபதி ஜெயந்த் படேல் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜிக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்துள்ளார். அவரது பதவி விலகல் கடிதம், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
ஜெயந்த் படேல், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். மூத்த நீதிபதியாக இருந்தபோதிலும், நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு அவர் அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை படேல் அளித்துள்ளார்.
குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்த ஜெயந்த் படேல், கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடமாறுதல் செய்யப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக முன்பு பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் என்பவர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை ஜெயந்த் படேல்தான் விசாரித்தார். அப்போது இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஜெயந்த் படேல் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.