பி.எஸ்.எஃப். வீரர்களுக்கு தரமான உணவு கிடைக்க புதிய விதிமுறைகள்

எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்களுக்கு தரமான உணவு கிடைக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்களுக்கு தரமான உணவு கிடைக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் விடியோ ஆதாரத்தை வெளியிட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பணியாற்றும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், இதனால் சாப்பிட பிடிக்காமல் வீரர்கள் பட்டினி கிடப்பதாகவும் தேஜ் பகதூர் என்ற வீரர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அந்த உணவுகளை விடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர் வெளியிட்டிருந்தார். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்தப் புகார் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கான உணவுப் பொருள்களை, அதிகாரிகள் வெளியே பாதி விலைக்கு விற்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை இணையமைச்சர் ராஜீவ் மஹரிஷியை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநர் கே.கே. சர்மா புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்த ராஜீவ் மஹரிஷியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், பி.எஸ்.எஃப். தலைமையகம் சார்பில் புதன்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிஎஸ்எஃப்-இன் அனைத்து ராணுவ நிலைகளிலும் பணியாற்றும் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருள்களை வாங்குவது, அவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க உயரதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இதுதவிர, பி.எஸ்.எஃப். உணவகங்களில் இரட்டைச் சோதனை மேற்கொள்ளுதல், உணவின் தரம் குறித்து பி.எஸ்.எஃப். வீரர்களிடம் கேட்டறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com