எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வைத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டி வருகிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் விடியோ காட்சிகளை அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து வியாழக்கிழமை வெளியிட்டார். அந்த விடியோவில், '' நாட்டில் தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன; எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் செல்லாததாக்கப்பட்டு விட்டது. இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல் மெளனம் சாதிக்கிறார்'' என்று ராகுல் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமித் ஷா தனது பதிவில் கூறியிருப்பதாவது:
சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் செல்லாததாக்கப்பட்டு விட்டது என்று ராகுல் காந்தி பொய் சொல்வதைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாகக் கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை உச்ச நீதிமன்றம் நீர்த்துப்போகச் செய்துவிட்டதாகக் கூறி, தலித் சமூக அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் மத்திய அரசு மெளனமாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. அன்றைய தினம் வடமாநிலங்களில் பல்வேறு தலித் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் 11 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










