நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவை அலுவல்கள் தொடர்ந்து 21-ஆவது நாளாக வியாழக்கிழமை முடங்கியது. காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டிய நிலையில் நாள் முழுவதுமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மக்களவை அலுவல்கள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அமளி ஏற்பட்டதை அடுத்து அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மக்களவை நடவடிக்கைகளை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
பின்னர் நண்பகலில் அவை கூட இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் கோரிக்கையுடனான பதாகைகளை ஏந்தி அவையின் மையப் பகுதியில் திரண்டனர். அத்துடன், 'எங்களுக்கு நீதி வேண்டும்', 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், தேலுங்கு தேசம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, அவர்களில் சிலரால் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது அவைத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும் எஸ்.சி., எஸ்.டி. சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்வதாக கூறப்படுவது, நிரவ் மோடி தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி ஆகியவை குறித்த விவாதத்தையும் எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தயாராக இருப்பதாகக் கூறியதுடன், அதன் மீது உடனடியாக விவாதம் நடத்துமாறும் கோரினார்.
மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தைத் தடுக்க காங்கிரஸ் தான் முயற்சிப்பதாகவும், இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இருந்து மத்திய அரசுதான் விலகிச் செல்கிறது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவாதத்தை தடுக்க முயற்சிப்பதாக சில கட்சித் தலைவர்களின் பெயரை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் குறிப்பிட்டுக் கூறியதற்கு சோனியா காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அவைக் குறிப்புகளில் அந்தப் பெயர்கள் இடம்பெறாது என்று கூறினார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர். அப்போது அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அவர்களிடம், 'நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்துக்காக உறுப்பினர்களைக் கணக்கெடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு செவி சாய்க்காமல் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதை அடுத்து, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை முழுவதுமாக அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மாநிலங்களவையும் ஒத்திவைப்பு: இதனிடையே, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையும் தொடர்ந்து 21-ஆவது நாளாக வியாழக்கிழமை முடங்கியது. முன்னதாக, காலையில் மேலவையின் அலுவல்கள் தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நண்பகல் 2 மணி வரையில் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நண்பகலில் தொடங்கியபோதும் ஆர்ப்பாட்டம் காரணமாக மீண்டும் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










