/

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் மெஹபூபா சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்தார். காஷ்மீர் மாநிலத்தின் நடப்புச் சூழல் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கினார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:46 pm

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்தார். காஷ்மீர் மாநிலத்தின் நடப்புச் சூழல் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கினார்.
இச்சந்திப்பு குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் மெஹபூபா, காஷ்மீர் மக்களிடையே இருக்கும் ஒடுக்கப்பட்ட சூழலுக்கு உகந்த தீர்வு காண்பதன் மூலமாக, மாநிலத்தில் நிலவும் தொடர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் கொந்தளிப்பான நிலை, மாநில மக்களை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், நிலையற்ற தன்மை மற்றும் 
மரண அச்சுறுத்தல்களில் இருந்து வெளிவர, நாட்டின் அரசியல் தலைவர்களிடமிருந்து அவர்கள் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் முஃப்தி அப்போது வலியுறுத்தினார்.
எல்லைப் பகுதியில் இணக்கமான சூழல் நிலவ கோரிக்கை விடுத்த மெஹபூபா, இந்தியா-பாகிஸ்தான் இடையே உயர்மட்ட அளவில் தகுந்த இடைவெளியில் சந்திப்பு நடைபெற வலியுறுத்தினார்.
'காஷ்மீர் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் அதிகமான போக்குவரத்து வழித்தடங்கள் திறக்கப்படுவது, இரு நாட்டினரும் பரஸ்பரம் பயணிப்பது ஆகியவற்றின் மூலமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு இயக்கம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்' என்று மெஹபூபா கேட்டுக் கொண்டார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா பெத் பழங்கால கல்வி மையத்தை மேம்படுத்துவது, கூட்டணிக் கொள்கைகளை அமல்படுத்துவது, பிரதமர் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் அப்போது ஆலோசிக்கப்பட்டன என்று அந்த அதிகாரி கூறினார்.
வரவேற்பு: இதனிடையே, சிதிலமடைந்துள்ள சாரதா பெத் பழங்கால கல்வி மையத்தை மேம்படுத்தி மீண்டும் திறக்க பிரதமரிடம் மெஹபூபா கோரிக்கை வைத்ததற்கு, குடிபெயர்ந்தவர்களுக்கான அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.