/

2019 மக்களவைத் தேர்தல்: பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:40 pm

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பிசினஸ் பள்ளியில் நடைபெற்ற 14ஆவது ஆண்டு இந்திய வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியதாவது:
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். 3 காரணங்களினால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது. அதாவது, நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமை, ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கை மற்றும் நாட்டு மக்களை செயல்பட வைத்தது, குறிப்பாக ஹிந்து மதத்தினரை சாதி பற்றிலிருந்து வெளியே வரச் செய்து, பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்தது ஆகியவையே அந்த காரணங்களாகும். 
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கெல்லாம் ஊழல் அகற்றப்படாமல் அதன் எச்சங்கள் மிஞ்சியுள்ளனவோ, அவைகள் அகற்றப்படும் என்று பாஜக பிரசாரம் செய்யும். நாங்கள், சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல.
இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியைச் சந்தித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பும் (ஜிஎஸ்டி) தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. இதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஜிஎஸ்டி வரி குறித்து தொழில்நிறுவனங்கள் மத்தியில், வரி தீவிரவாதம் என்ற கருத்து நிலவுகிறது. அதை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது, அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அரசு செய்யவில்லை. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியிருக்கக் கூடாது.
வருமான வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு சராசரியாக 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடையும் வகையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை பாஜக அமல்படுத்தும் என நம்புகிறேன்.
பல வங்கிகளில் நடந்துள்ள நிதி மோசடிகளுக்கு, அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் இடையே நிலவிய கூட்டணிதான் காரணமாகும். 
வங்கிகளில் நடக்கும் முறைகேடு தொடர்பாக அங்கு பணிபுரியும் ஊழியர்களை கைது செய்வதைக் காட்டிலும், வங்கியில் உயர் பதவியிலிருப்போரை கைது செய்ய வேண்டும் என்பதே எனது அபிப்ராயமாகும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.