நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்த மாதம் அனுப்பப்பட இருந்த சந்திராயன்-2 விண்கலம், இந்த ஆண்டு இறுதியில் (அக்டோபர்-நவம்பர்) அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் மத்திய அரசிடம் தெரிவித்தார்.
சந்திராயன்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கு முன்பு சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தேசிய அளவிலான குழு பரிந்துரைத்துள்ளது என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை கே.சிவன் சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதத்துக்குள் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-2 விண்கலத்தில் சிறப்பு ஆய்வூர்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது. அது நிலவின் தென் துருவத்தில் களம் இறக்கப்பட்டு ஆய்வில் ஈடுபடவுள்ளது. மிகவும் நுட்பமான பகுதியான தென் துருவத்தில் இதுவரை எந்த நாடுகளும் ஆய்வில் ஈடுபட்டதில்லை. அங்கு, மண், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வூர்தி சேகரித்து கொண்டு வரும்.
கடந்த மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்தச் செயற்கைக்கோள் எங்கிருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை.
இதற்கு முன்பு சந்திராயன்-1, மங்கள்யான் ஆகிய விண்கலங்களை இஸ்ரோ முறையே நிலவுக்கும், செவ்வாய்க்கும் செலுத்தி வெற்றி கண்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலத்தை செலுத்த மொத்தம் ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விண்கலம் ஏப்ரலில் செலுத்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். தற்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










