ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

நவ்ஜோத் சித்துவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்துவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியிடுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:26 am IST

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்துவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியிடுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் நிறுத்துவதில் நேரிட்ட தகராறில், சித்துவும் அவரது நண்பர் ரூபிந்தர் சிங் சாந்துவும் குர்நாம் சிங் என்பவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குர்னாம் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சித்துவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சித்துவை கடந்த 1999ஆம் ஆண்டு விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம், சித்துவுக்கும், சாந்தவுக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சித்துவும், சாந்துவும் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2007ஆம் ஆண்டு அமிருதசரஸ் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சித்து போட்டியிட ஏதுவாக சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மனு மீது, உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு, நீதிபதிகள் செலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்து சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ். சீமா ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், 'வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது; குர்னாம் சிங்கின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையில் தெளிவில்லை' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பு வெளியிடுவதை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.
முன்னதாக, பாஜகவில் இருந்த சித்து, பஞ்சாப் தேர்தலின்போது அக்கட்சியில் இருந்து காங்கிரஸில் சேர்ந்தார். பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசில் தற்போது அவர் அமைச்சராக உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து பஞ்சாப் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.