ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு: பாஸ்வான் உறுதி

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக, நீதிமன்றத்தை மத்திய அரசு நாடும் என்று மத்திய அமைச்சர்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:57 pm

DIN

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக, நீதிமன்றத்தை மத்திய அரசு நாடும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலர்களை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்க்கச் செய்யும் விதமாக, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எனக் கூறி கூறி தலித் சமூகத்தினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். 
எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை குறை கூறின. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அதற்கு முன்னதாக, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய விதிமுறையை பல்கலைக்கழக மானியக் குழு இரு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு எதிராகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெற்றத் தரப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும்; பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளைக் கண்டறிவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் ஆகியோரைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அதில், நானும் இடம்பெற்றுள்ளேன். 
இந்தக் குழு, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக, உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு நாட வேண்டும் என்று விரும்புகிறது. அதன்படி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
மொத்தத்தில் எஸ். சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு நீதியைப் பெற்றுத் தருவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.