

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக அவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சகமும் இதே கருத்தைக் கூறியிருந்தது.
இந்தியாவில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.69.56-க்கு விற்பனையாகிறது. இதேபோல், பெட்ரோல் விலையும் (லிட்டர் ரூ.77.49) பாஜக அரசின் ஆட்சியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது கலால் வரியை மத்திய அரசு 9 முறை அதிகரித்தது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாய் மட்டும் கலால் வரியைக் குறைத்தது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுபாஷ் சந்திர கார்க் கூறியதாவது:
கலால் வரியைக் குறைத்தால் மத்திய அரசின் நிதி சார்ந்த இலக்குகளை எட்ட முடியாமல் போய்விடும். கலால் வரியைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்கலாம் என்றாலும், அதனால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால், பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்ட முடியாத சூழ்நிலை உருவாகும். ஏனெனில், கலால் வரியில் ஒரு ரூபாயைக் குறைத்தால் அரசுக்கு ரூ.13,000 கோடி அளவுக்கு வருவாய் குறையும்.
அப்படி மீறி கலால் வரியைக் குறைத்தால் சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நேரடி மானியத்தை நிறுத்த வேண்டியது ஏற்படும். வட கொரியா- அமெரிக்கா உள்பட சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் தணிந்து வருகின்றன. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க இருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்ளூரில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 6 நாள்களாக மாற்றவில்லை. கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவுள்ளதுதான் இதற்குக் காரணமா? என்ற கேள்விக்கு, 'இது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது' என்று கார்க் பதிலளித்தார்.
ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.15.33-ம் மத்திய அரசால் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. பல்வேறு மாநில அரசுகளும் இதைவிட சற்று குறைவாக வாட் வரியை பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. தெற்காசிய நாடுகளில் எரிபொருள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இந்தியாவில் மட்டும்தான். அதன் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அதிகபட்ச வரியே இதற்குக் காரணம். பெட்ரோல், டீசல் விலையில்ஏறக்குறைய பாதியளவு வரியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.