இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

நீடிக்கும் சர்ச்சை: மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிபதி ஜோசப் அளித்த தீர்ப்பு காரணமா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் உள்ளிட்ட 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 11:04 am IST


புது தில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் உள்ளிட்ட 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நாளை புது தில்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இவர்கள் பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான பதிவில் மூன்று பேரின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் நீதிபதி ஜோசப்பின் பெயர் 3வது இடத்தில் இருப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

அந்த பட்டியலில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் பெயர்களைத் தொடர்ந்து ஜோசப்பின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோர் முறையே 2017 மற்றும் 2016ம் ஆண்டுகளில்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர் என்றும், அதற்கு முன்பே ஜோசப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்றும், எனவே, பதவி மூப்பு அடிப்படையில் ஜோசப்பின் பெயரே பட்டியலில் முதலில் வர வேண்டும் என்று நீதிபதிகள் கூறுகிறார்கள்.

ஆனால், மத்திய அரசின் தரப்பில், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் இருவரும் நீதிபதி ஜோசப்புக்கு முன்பே நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டவர்கள் என்றும், அதற்குப் பிறகுதான் ஜோசப் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்றும், அதன் அடிப்படையில்தான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

பணி மூப்பு அடிப்படையில்தான் நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வார்கள் என்பதால் இந்த சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகண்ட் மாநில தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்,  ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் 3 பேரின் நியமனத்தையும் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இன்னும் 6 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டதையும் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியிலிருக்கும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, இவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை இரவு தனது ஒப்புதலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வு குழு) அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவியது. 

உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு அவரது பெயரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதலில் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதற்கு கே.எம். ஜோசப்புக்கு போதிய பணிமூப்பு இல்லை என்று மத்திய அரசு காரணம் தெரிவித்திருந்தது.

உத்தரகண்டில் ஆட்சியிலிருந்த ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த கே.எம். ஜோசப், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனாலேயே அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டது.

எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு கே.எம். ஜோசப்பின் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என்று கொலீஜியம் அமைப்பு கடந்த மே மாதம் 16ஆம் தேதி கொள்கை அளவில் முடிவெடுத்தது. இதன்படி, அவரது பெயரை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு கடந்த ஜூலை மாதம் பரிந்துரை செய்தது. 

அரசு விதிப்படி, உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பின் பரிந்துரையை மத்திய அரசு ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும். 2ஆவது முறையாக அதே நீதிபதியின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்தால், அந்த பரிந்துரையை திருப்பி அனுப்ப முடியாது. 

இதன்படி, கே.எம். ஜோசப் நியமனத்துக்கு மத்திய அரசு தனது ஒப்புதலை அண்மையில் அளித்தது.

இதே காரணத்தை காங்கிரஸ் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிபதி ஜோசப் மீது மத்திய அரசு தொடர்ந்து காழ்ப்புணர்ச்சிக் காட்டி வருவதாகவும், உத்தரகாண்டில் 2016ம் ஆண்டு பாஜகவுக்கு எதிராக அவர் அளித்த தீர்ப்பே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.