மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வரும் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ஹரிவன்ஷ் அறிவிக்கப்பட வாயப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேரளத்தில் இருந்து காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் ஆவார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2ஆவது அரசின் ஆட்சிக்காலத்தில், மாநிலங்களவை துணைத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி கடந்த 2 மாதமாக காலியாக உள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை அந்த அவையின் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்; இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை 8ஆம் தேதி பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ்?: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஹரிவன்ஷ், அந்தப் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் சார்பிலும், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் அவரது பெயர் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், மாநிலங்களவையில் தங்களது கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிற மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
முன்னதாக, புதிய மாநிலங்களவை துணைத் தலைவரை ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் கருத்தொற்றுமை அடிப்படையில் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதால், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


