மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

எஸ்.சி., எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும்

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் இந்த மசோதா, கடந்த 6ஆம் தேதி நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்மீது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பதிலளித்து பேசியதாவது:
இந்த மசோதாவை, எந்தவித நிர்ப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு மத்திய அரசு கொண்டு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு உறுதிபூண்டிருந்தார். அதன்படியே, மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த அவையில் மசோதா நிறைவேறுவதன் மூலம், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கும்.
உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. இந்த கட்டுப்பாடுகளால், கிரிமினல்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பது தடுக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
சில உறுப்பினர்கள் பேசியபோது, இந்த சட்டத்தின்கீழ் தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். இந்த மசோதாவில் அதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஏற்கெனவே 14 மாநிலங்கள், 195 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துள்ளன. சில மாநிலங்கள், மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களை இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்துள்ளன என்றார்.
மசோதாவை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. அபிர் ரஞ்சன் விஸ்வாஸ், பிஜு ஜனதா தளம் எம்.பி. சரோஜினி ஹேம்ராம், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராம் சந்திர பிரசாத் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சோமபிரசாத் ஆகியோர் பேசினர். காங்கிரஸ் எம்.பி. குமாரி ஷெல்ஜா பேசியபோது, தலித்துகளுக்கு சாதகமாக மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவில்லை என்றார்.
பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா பேசுகையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியிடும்போது உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பை நீக்கிவிட்டு, இந்திய நீதித்துறை சேவை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார். மேலும், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, 10 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை மீண்டும் தொடங்கியதும், மசோதாவை ஆதரித்து சமாஜவாதி எம்.பி. ராம்கோபால் யாதவ், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த், பகுஜன் சமாஜ் எம்.பி. ராஜாராம், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.