இந்திரா காந்தியும், வாஜ்பாயும் அரசியலில் நேர் எதிர் துருவங்களாக விளங்கியவர்கள். 1980-களில் காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறிய அனைத்து தவறுகளையும் நாடாளுமன்றத்தில் உரக்கக் கூறியவர் வாஜ்பாய். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே வெளிப்படையான மோதல் இருந்து வந்தது.
அந்தத் தருணத்தில், இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் சிக்கி காலமானார். அந்தச் செய்தி அறிந்ததும் கட்சி பேதங்களைக் கடந்து தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனைக்குள்ளானார் வாஜ்பாய்.
உடனடியாக இந்திராவுக்கு அவர் ஆறுதல் கூறினார். அதுமட்டுமன்றி, அதற்கு அடுத்த சில மாதங்களுக்கு இந்திராவையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் எவரும் விமர்சிக்கக் கூடாது என்று கட்சியினருக்கு கட்டளையிட்டார்.
இந்திரா காந்தி அந்த சோகத்தில் இருந்து விடுபட்ட பிறகுதான் மீண்டும் தனது அரசியல் அஸ்திரத்தை கைகளில் எடுத்தார் வாஜ்பாய். தனயனை இழந்த தாயின் வலியை சொந்த உற்றார் உறவினரே உணர்ந்து கொள்ளாத காலத்தில், இந்திரா மீது வாஜ்பாய் காட்டிய கனிவும், மாண்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.