சென்னை: வியாழனன்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளியன்று தில்லி செல்கின்றனர்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளியன்று தில்லி செல்கின்றனர்.
அதிமுக சார்பாக அதிமுக வழிகாட்டும் குழு இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தில்லி செல்லவுள்ளனர்.
அதேபோல் திமுக சார்பாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் தில்லி செல்லவுள்ளனர்.