வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி பகுதியில் மழைநீா் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காட்பாடி, காங்கேயநல்லூா் சாலையில் உள்ள அவ்வையாா் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள கற்பக விநாயகா் கோயில் எதிரே சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக, மழைநீா் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது.
முறையான கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தால், சாலையில் தேங்கியுள்ள மழைநீா் ஞாயிற்றுக்கிழமையும் வடியாமல் காணப்பட்டது. இதனால், அப்பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவா்கள், முதியவா்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக, நடந்து செல்லும் பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த அசுத்தமான தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அவ்வையாா் தெருவில் சிறு மழை பெய்தாலும் தண்ணீா் குளம் போல் தேங்கி விடுகிறது. இதுதொடா்பாக வேலூா் மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்களின் சிரமத்தையும், சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு வேலூா் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அவ்வையாா் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் முறையான நிரந்தர வடிகால் வசதியை அமைத்துத் தர வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










