புது தில்லி: கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சி 100 நாள்களை நிறைவு செய்துள்ள நிலையில், மாநில முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
தில்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பிறகு குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக முதல்வராக 100 நாள்களை நிறைவு செய்துள்ளதால், மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தியை சந்தித்தேன். கர்நாடக அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக ராகுல் கூறினார்.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பல்வேறு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலைவர் பதவி நியமனம் தொடர்பாக விரைவாக முடிவெடுக்குமாறு ராகுல் காந்தியை கேட்டுக் கொண்டேன். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அடுத்து வரும் நாள்களில் முடிவெடுக்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.
இதனிடையே, அடுத்த தேர்தலில் கர்நாடகத்தின் முதல்வராக தாம் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்று சித்தராமையா கூறியது தொடர்பான கேள்விக்கு குமாரசாமி அளித்த பதிலாவது:
சித்தராமையாவின் கூற்று தொடர்பாக ராகுல் காந்தியுடன் கலந்தாலோசிக்கவில்லை. ஒரு தலைவர் என்ற முறையில், முதல்வராவதற்கு அவர் விருப்பம் தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது? அடுத்த தேர்தலில் மக்கள் விரும்பும் பட்சத்தில் தாம் முதல்வராக வரலாம் என்று சித்தராமையா தனது கூற்றை தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது கர்நாடக வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டேவுக்கு கூட முதல்வராகும் ஆசை இருக்கலாம். ஒருவரது கருத்தை திரிக்கவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ வேண்டிய தேவையில்லை. சித்தராமையாவின் தலைமையின் கீழ் கர்நாடகத்தில் கூட்டணி அரசு பலமாக உள்ளது. இந்த அரசு பாதுகாப்பாகத் தொடர, சித்தராமையாவின் ஆதரவு தேவையான ஒன்று. காங்கிரஸூடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கர்நாடகத்தில் கூட்டணி அரசு முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்று குமாரசாமி பதிலளித்தார்.
இந்நிலையில், நூறு நாள் ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுட்டுரையிலும் குமாரசாமி பதிவிட்டார்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: இதனிடையே, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரையும் குமாரசாமி சந்தித்தார்.
அப்போது, மத்திய அரசு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ள, கர்நாடக அரசு வரம்பில் வரும் அதிகாரிகளை மீண்டும் மாநில பணிகளுக்கு அனுப்புமாறு ஜிதேந்திர சிங்கிடம் கோரிய குமாரசாமி, மாநிலத்தின் வெள்ளச் சூழல் மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவருடன் ஆலோசித்தார்.
அப்போது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டம், மலநாடு ஆகிய பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.1,184.40 கோடி நிதியுதவி கோரினார்.
கர்நாடக அமைச்சரவையில் தற்போது 16 காங்கிரஸ் அமைச்சர்களும், 10 மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் உள்ளனர். விதிகளின்படி, இன்னும் 4 பேர் அமைச்சரவையில் இணைக்கப்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விமான நிலைய ஊழியராக நடித்து பெண்ணிடம் ரூ. 3 லட்சம் மோசடி: ஒருவா் கைது

வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா்: ஊழல் தடுப்பு போலீஸாா் மக்களை ஏமாற்றக் கூடாது! உயா்நீதிமன்றம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதித்தும் நீரின் எதிா்ப்பு விசையால் இயக்க மறுத்த பரிசல் ஓட்டிகள்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



