
புது தில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படுமா? என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்குமாறு அருண் ஜேட்லிக்கு ராகுல் வலியுறுத்தியிருந்த நிலையில், முடிவெடுத்து அறிவிக்க இன்னும் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருப்பதாக ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, உண்மைக்குப் புறம்பான தகவல்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 15 கேள்விகளை தனது முகநூல் பக்கத்தில் அவர் புதன்கிழமை எழுப்பியிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு புதிதாக 126 போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2001-ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன், இஏடிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களிடம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு ஒப்பந்தப் புள்ளி கோரியது.
அதன் பிறகு, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தை தேர்வு செய்து, அந்த நிறுவனத்துடன் காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
பின்னர், அந்த ஒப்பந்தத்தையும் மறுஆய்வு செய்வதாக, காங்கிரஸ் கூட்டணி அரசு தெரிவித்தது. இவ்வாறு, ஒப்பந்த பேச்சுவார்த்தையிலேயே 11 ஆண்டுகளை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வீணடித்துவிட்டது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டு அலட்சியமாக இருந்து விட்டனர். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கை முடக்கம்தான் இதற்கு காரணம்.
அதன் பிறகுதான், முந்தைய அரசைக் காட்டிலும், சிறந்த விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அந்நாட்டுடன் புதிய ஒப்பந்தத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி மேற்கொண்டது.
அதன்படி, போர் விமானத்தின் 50 சதவீத பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் பிரான்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும். அந்த தனியார் நிறுவனத்தை, பிரான்ஸ் நிறுவனம்தான் தேர்வு செய்தது.
ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை தகவல்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால், இந்தியா-பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து மக்கள் மத்தியில் தவறான கருத்து ஏற்பட்டு விட்டது. மேலும், நாட்டு நலனில் காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியின் தலைவர்களும் சமரசம் செய்து கொண்டு விட்டனர்.
ரஃபேல் போர் விமானத்தின் விலை பற்றி வெவ்வேறு தகவல்களை ராகுல் காந்தி கூறி வருகிறார். ஒரு போர் விமானத்தின் விலை ரூ.700 கோடி என்று தில்லியிலும், கர்நாடகத்திலும் முறையே கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கூறினார். பின்னர், நாடாளுமன்றத்தில் பேசும்போது அதன் விலையை ரூ.520 கோடியாகக் குறைத்து விட்டார். பிறகு ராய்ப்பூருக்குச் சென்றபோது அதன் விலையை ரூ.540 கோடியாக உயர்த்தி விட்டார்.
அதைத் தொடர்ந்து, ஹைதராபாத்துக்குச் சென்றபோது, ரூ.526 கோடி என்ற புதிய விலையை அவர் கண்டுபிடித்துள்ளார். இவை அனைத்தும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றிய உண்மைகள் தெரியாமலேயே எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும். எனவே, இந்த ஒப்பந்தம் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு முன், அதைப் பற்றிய அடிப்படை உண்மைகளை தேசிய கட்சிகளும், அக்கட்சியின் தலைவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், அவரது கட்சியும் மூன்று முறை தவறு செய்துள்ளது.
முதலாவதாக, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டு, ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதிசெய்யாமல் 10 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி காலம் தாழ்த்தியது; இரண்டாவதாக, போர் விமானத்தின் விலை பற்றிய தவறான தகவல்களை ராகுல் காந்தி கூறி வருகிறார்; மூன்றாவதாக, அவரது தவறான தொடர் பிரசாரத்தால் போர் விமானம் கொள்முதல் செய்வதும் மேலும் தாமதமாகிறது.
எனவே, இந்த ஒப்பந்தம் குறித்து நான் எழுப்பியுள்ள 15 கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, ஜேட்லியின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி எதிர்கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது, ரஃபேல் கொள்ளையை இந்த தேசத்தின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்ததற்காக, ஜேட்லிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக, விவாதிப்பதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படுமா? இந்த விவகாரத்தில், உங்களுடைய தலைவர் (பிரதமர் மோடி) தனது நண்பரை (அனில் அம்பானி) காப்பாற்றி வருவதுதான் பிரச்னையாக உள்ளது. இதுதொடர்பாக, 24 மணி நேரத்தில் ஜேட்லி பதில் அளிப்பார் என காத்திருக்கிறேன் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், தான் கொடுத்த காலக்கெடுவுக்கு இன்னும் 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே இருப்பதாக ராகுல் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






