
தனிநபர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், தனிநபர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கும் பட்சத்தில், அவரது நிர்வாக வரம்புக்கு உள்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய பிறகு அவரே
வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு ஒன்றை புதன்கிழமை விசாரித்தபோது இவ்வாறு தெரிவித்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை செல்லும் என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள கிளை பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில், அங்கீகரிக்கப்படாத கல்லூரியில் சேர்க்கும் விவகாரத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக மாவட்ட துணை ஆட்சியரிடம் மாணவி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு மாவட்ட துணை ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கல்லூரியின் நிறுவனர் நமன் பிரதாப் சிங் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், ஆட்சியரிடம் தனிநபர் அளிக்கும் புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு அவர் உத்தரவிட முடியாது என்றும், இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு 156(3) அடிப்படையில் ஆட்சியருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனினும், ஆட்சியரின் நிர்வாக எல்லைக்கு உள்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நிர்வாக ரீதியாக அவர் விசாரணை நடத்திய பிறகு வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் நீதிபகள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







