
கனடா-அமெரிக்கா இடையே தீவிரமடைந்த வர்த்தகப் போர்: அமெரிக்கப் பொருள்கள் மீது 50% வரி!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 700-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்து கனடா பதிலடி குறித்து...

மார்க் கார்னி - AP
ஒட்டாவா: பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனடா மீது திடீரென 50 சதவீத வரி வித்த அமெரிக்காவுடன் பழைய உறவு திரும்புவதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கூறியிருந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 700-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்து கனடா பதிலடி கொடுத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக அமெரிக்காவும்-கனடாவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், பதவியேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பு என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
தனது ஆட்சி காலத்தில் அமெரிக்கத் தொழில்களை மேம்படுத்துவதற்கான புதிய வர்த்தகக் கொள்கைகளில் ஈடுபட்ட டிரம்ப், கடந்த ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பல்வேறு நாடுகளின் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார்.
கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்தார். விதிக்கப்பட்டுள்ள இந்த வரிகளை ஏற்காமல் கனடா வரி அதிகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக கனடா மற்றும் சீனாவும் அமெரிக்காவுக்கு கூடுதல் வரிகளை விதித்தது. இதனால் கோபமடைந்த டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரூ.2 லட்சம் கோடி டாலர் (2 ஆயிரம் கோடி டாலர்) மதிப்பிலான பொருள்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அறிவித்தார்.
மேலும், 2027 முதல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இதனால் கனடாவின் ஆண்டு ஏற்றுமதி 5 சதவீதம் குறையும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், வாஷிங்டனில் மூன்று நாள்களாக இருதரப்பினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கனடாவிடம் இருந்து அமெரிக்கா அதிகமாக எதிர்பார்த்துள்ளது. இதனால் கனடாவின் தொழிலாளர்கள், வணிகங்கள், முக்கியத் துறைகள் மற்றும் தேசிய நலன்களை பாதிக்கும் எந்தவொரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு கனடா முடிவெடுத்தது.
இந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 22 ஆம் தேதி கனடா மீதான 50 சதவீத வரிவிதிப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நிபந்தனைகள் நியாயமற்றவை எனக்கூறி பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு ஒட்டாவுக்கு திரும்புமாறு தனது நாட்டு பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டார்.
இதையடுத்து கனடா தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி கனடா பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிக்கு இணையாக, 27.6 பில்லியன் கனடா டாலர் (சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருள்கள் மீது "டாலருக்கு டாலர்" என்கிற வகையில் பதிலடி வரிகளை விதிக்கப்போவதாக கனடாவின் தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கனடா நிதியமைச்சக அறிவிப்பின்படி, வீட்டு உபயோகப் பொருள்கள், சீஸ் போன்ற பால் பொருள்கள், மீன் மற்றும் கடல் உணவுகள் மற்றும் சில எஃகு மற்றும் அலுமினியம் சார்ந்த பொருள்கள் 25 சதவீத வரிக்கு உள்படுத்தப்படும்.
மேலும், முன்பு 25 சதவீத வரிக்கு உள்பட்டிருந்த எஃகு மற்றும் அலுமினியப் பொருள்கள், அத்துடன் தளவாடங்கள் மற்றும் ஆடைகள் மீதும் 50 சதவீத பதிலடி வரிகள் விதிக்கப்படுகின்றன.
வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல், அமெரிக்காவின் பிரிவு 338 மற்றும் பிரிவு 232 வரிகளின்கீழ், குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களுக்கு இணையான அமெரிக்கப் பொருள்கள் மீது கனடா 15, 25 மற்றும் 50 சதவீத என பதிலடி வரிகளை விதிக்கும்; ஒவ்வொரு பொருளுக்கும் விதிக்கப்படும் வரி விகிதம் அமெரிக்காவின் தொடர்புடைய வரி விகிதத்திற்கு இணையாக இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 27.6 பில்லியன் மதிப்புள்ள பொருள்களைப் பாதிக்கும்.
கனடாவில் உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆதரவான கட்டமைப்பை கனடா உருவாக்கும் என்றும் அமெரிக்க விதித்துள்ள வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடா வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவித் தொகுப்பையும் அறிவித்தது.
இந்த உதவித் தொகுப்பில் 'பிராந்திய வரி பதில் முயற்சி' மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 1.5 பில்லியன் கனடா டாலரும், 'பிவோட் டு குரோ' திட்டத்தின் கீழ் 500 மில்லியன் கனடா டாலர் புதிய பணப்புழக்க ஆதரவும், வரி பாதிப்புக்குள்ளான வணிகங்களுக்காக 'கனடா வலுவான பல்வகைப்படுத்தல் நிதி' மூலம் 2 பில்லியன் கனடா டாலரும் அடங்கும்.
மேலும், தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களுக்கு உடனடி ஆதரவாக 3.5 பில்லியன் கனடா டாலர் நிதியுதவியை வழங்குகிறது.
பரஸ்பர வரிகள் மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதரவுத் தொகுப்பு ஆகியவை தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளை நிறுத்தியயது ஏன்?
கனடாவின் நலன்களுக்கு உகந்ததாக இல்லாத புதிய நிபந்தனைகளை அமெரிக்கா முன்மொழிந்தது; அதாவது, கனடாவிடம் இருந்து அமெரிக்கா அதிகமாக எதிர்பார்த்துள்ள நிலையில், பதிலுக்கு மிகக் குறைவாகவே வழங்க முன்வந்தது. இதையடுத்து கனடாவின் தொழிலாளர்கள், வணிகங்கள், முக்கியத் துறைகள் மற்றும் நாட்டின் நலன்களைப் பாதிக்கும் வகையிலான ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, கனடா பேச்சுவார்த்தைகளை நிறுத்திவைத்ததாகு," கனடா நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கனடா தரப்பில் அமெரிக்கா ஏற்க முடியாத அளிவிற்கு கூடுதல் சலுகைகள் கோரப்பட்டது. குறிப்பாக, வாகனங்கள், எஃகு, அலுமினியம் மற்றும் மரப்பொருள்களில் கனடா கூடுதல் சலுகைகளை எதிர்பார்த்தது என்றும் புதிய அமெரிக்க வரிகளுக்கு கனடா பதிலடி கொடுத்தால், மீண்டும் வர்த்தகச் சமநிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட டிரம்புக்கு பரிந்துரைகள் வழங்கப்படும் என அமெரிக்க வர்த்தகப் பிரிதிநிதி ஜோமிசன் கிரீர் எச்சரித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கு இடையேயான "டாலருக்கு டாலர்" என்கிற வகையில் பதிலடி வரிகளால், மீண்டும் வர்த்தகப் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
Summary
Canada has announced retaliatory tariffs on more than 700 US goods worth CAD 27.6 billion (about USD 20 billion)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







