
புது தில்லி: குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் பணியில் சாதி அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதாக கூறித் தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்க, மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியாணாவைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணிக்கான நியமனத் தேர்வு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி நடந்தது, இந்த தேர்வுக்கு ஜாட், ராஜ்புத் மற்றும் ஜாட் சீக்கியர் ஆகிய 3 சாதியினர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். எனவே இந்த நியமனத்தினை ஒத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவானது நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் சஞ்சீவ் நாருலா ஆகியோர் கொண்ட அமர்வின் முன் புதனன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய ராணுவ அமைச்சகம், ராணுவ உயரதிகாரி, குடியரசு தலைவரின் பாதுகாவல் தளபதி மற்றும் ராணுவ பணி நியமன இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
அதேநேரம் இதுபற்றி வேறு எவரும் கூடுதலாக மனு செய்ய விரும்பினால் அடுத்த விசாரணைக்கு முன் அவர்கள் கோரிக்கை வைக்கலாம்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் மே 8ந் தேதிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
முன்னதாக இதுபோன்ற மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.