காவிரி: கர்நாடகத்துக்கான நீதியை நிலைநாட்ட அரசு தீவிரம்: பேரவையில் ஆளுநர் வஜுபாய் வாலா பேச்சு

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கான நீதியை நிலைநாட்ட மாநில அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.
காவிரி: கர்நாடகத்துக்கான நீதியை நிலைநாட்ட அரசு தீவிரம்: பேரவையில் ஆளுநர் வஜுபாய் வாலா பேச்சு
Updated on
1 min read


காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கான நீதியை நிலைநாட்ட மாநில அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.
2017-ஆம் ஆண்டில் முதல்முறையாக திங்கள்கிழமை கூடிய கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் வஜுபாய்வாலா ஆற்றிய உரை:
ஏழைகள், நலிவடைந்தோர், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கும், கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை சாதிப்பதிலும், சமூகநீதியைக் காப்பதிலும், அனைத்து சமுதாயத்தினரின் நலனை பேணுவதிலும் நம்பமுடியாத சாதனைகளை எனது அரசு செய்துள்ளது. பட்டினியில்லா கர்நாடகத்தை கட்டமைக்க அரசு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும், மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் எனது அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆங்காங்கே நடைபெற்ற மத வன்முறைகளைக் கடுமையாக கையாண்டிருக்கிறோம். 
காவிரி மற்றும் கிருஷ்ணா ஆற்றுப்படுகை விவகாரங்களில் நமது பங்கு நீரை பெறவும், கர்நாடகத்தின் நீதியை நிலைநாட்டவும் உறுதிப்பூண்டிருக்கிறோம்.மகதாயி ஆற்றுப்படுகையிலிருந்து மாநில மக்களுக்கு உரிமையுடன் கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத்தர தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம். 
காவல் துறையை நவீனமாக்க, தொழில்முறையாக்க ஏராளமான திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு, காவலர்களின் நலனிலும் அக்கறை காட்டப்பட்டுள்ளது. நவீனமாக்கும் திட்டத்தில் 84 காவல் நிலையங்கள், 2 மாவட்டக் காவல் அலுவலக வளாகங்கள், 232 குடியிருப்புகள், 6 மாவட்டக் காவல் பயிற்சி மையங்கள், 10 புறக்காவல் நிலையங்கள், 10 படை இருப்பிடம், 6 தளவாடக்கிடங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 
குடிமக்கள் சார்ந்த காவல் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நேரடியாக 29,684 காவலர்கள், துணை காவல் ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
2017-ஆம் ஆண்டில் 11 ஆயிரம் காவலர்கள், தலைமைக் காவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
பொதுவாழ்க்கையில் ஊழலைத் தடுக்க தொடர் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அரசு அமல்படுத்திய மின்-ஆளுமைத் திட்டங்களால் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் மேம்பட்டுள்ளது. ஊழல் தடுப்புப் படையை அமைத்து, ஊழல் தடுப்புகளில் கவனம் செலுத்திவருகிறது. 
வளர்ச்சிசார் ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்காக நஞ்சுண்டப்பா ஆணையத்தின் பரிந்துரையின்படி ஹைதராபாத்-கர்நாடக பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, சிறப்பு மேம்பாட்டு திட்டமும் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலை, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, இப்பகுதியில் 18,993 பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் மேம்பாட்டுக்கு ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com