ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க கோரும் மனு
தேர்தலில் ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரும் பொது நல மனு மீது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 19-இல் இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.


தேர்தலில் ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரும் பொது நல மனு மீது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 19-இல் இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடும்போது, இரண்டிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டால் ஒரு தொகுதியில் உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். இதன் காரணமாக, அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். இதனால், பொதுமக்கள் பணமும், அதிகாரிகளும் நேரமும் வீணாகிறது. மேலும், தன்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கும் அந்த வேட்பாளர் அநீதி இழைத்துவிடுகிறார்.
எனவே, தேர்தல்களின்போது ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33(7)-ஆவது பிரிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும்.
சுயேச்சைகளுக்கும் தடை: இதேபோல், நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். சுயேச்சைகளால் வாக்குகள் சிதறுவதுடன், தேர்தல் நடைமுறையிலும் நிலையற்றத் தன்மை ஏற்படுகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி, கடந்த 2004-இல் மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததையும் தனது மனுவில் அஸ்வினி குமார் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மனு மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான இறுதி விசாரணை அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு: இதனிடையே, நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து தேர்தல்களுக்கும் பயன்படுத்தும் வகையில் பொதுவான வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவிடக் கோரி, அஸ்வினி குமார் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனு மீதான விசாரணை, மேற்கண்ட அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, அந்த மனு மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...