மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுவை மோடி சிக்கவைத்தாரா?: நிதீஷ் பதில்

பிரதமர் மோடியின் சதித் திட்டம் காரணமாகவே, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறை செல்ல நேரிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்வைத்த குற்றச்சாட்டை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறுத்துள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுவை மோடி சிக்கவைத்தாரா?: நிதீஷ் பதில்
Updated on
1 min read

பிரதமர் மோடியின் சதித் திட்டம் காரணமாகவே, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறை செல்ல நேரிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்வைத்த குற்றச்சாட்டை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறுத்துள்ளார்.
பிகார் மாநிலம், பாட்னாவில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதீஷ் குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் நடைபெற்ற மாட்டுத் தீவன ஊழல் வழக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் இரு வழக்குகளில் லாலு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரான நரேந்திர மோடியும், பிகாரில் முதல்வராக இருக்கும் நானும் என்ன சதி செய்திருக்க முடியும்?.
மேலும், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் நான் மனுதாரராகக் கூட இல்லை. ஆனால் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக உள்ளவர்தான் (சிவானந்த் திவாரி) இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இருக்கிறார். மேலும், நீதிமன்ற விசாரணையில் உள்ள ஊழல் வழக்குகள் குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்க நான் விரும்பவில்லை என்றார் நிதீஷ்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதீஷ், "தேர்தலின்போது என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்குமாறு நான் லாலுவிடம் கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களாகவே முடிவெடுத்துதான் செயல்பட்டார்கள். அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு மக்களின் தீர்ப்புக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகக் கூறுகிறார்கள். மக்கள் நல்லாட்சி அமைக்கவே வாக்களித்தார்கள்; ஊழல் செய்ய அனுமதித்து வாக்களிக்கவில்லை' என்றார்.
இடைத் தேர்தல் விவகாரம்: தொடர்ந்து பிகார் மாநில இடைத் தேர்தல் குறித்துப் பேசிய நிதீஷ், "பிகாரில் அடுத்த மாதம் நடைபெறும் ஒரு மக்களவை, இரு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு. இந்தத் தொகுதிகளில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக இல்லை. மேலும், இடைத் தேர்தலில் நான் பிரசாரம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார் அவர்.
பிகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதியிலும் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் லாலு கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்.பி., எம்எல்ஏவாக இருந்தனர். மற்றொரு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வசம் இருந்தது. எனினும், பாஜகவுக்கு பணிந்துவிட்ட நிதீஷ் குமார், இடைத் தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு தரும் நோக்கில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com