சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி: நிர்மலா சீதாராமன்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:32 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராணுவ முகாமைத் தாக்கிய பயங்கரவாதிகளை எல்லைக்கு அப்பால் (பாகிஸ்தான்) இருந்து இயக்கியுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ராணுவ சீருடை அணிந்து கொண்டு சனிக்கிழமை திடீரென புகுந்தனர். அந்த முகாமினுள் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அந்த குடியிருப்பை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவத்தினர் உள்பட 6 பேர் உயிரிழந்துவிட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ஜம்முவுக்கு திங்கள்கிழமை வந்த நிர்மலா சீதாராமன், இந்தத் தாக்குதலில் காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியை நேரில் சந்தித்து மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். எனினும், ஒருவர் தப்பியோடி விட்டார். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த சிலர் உதவியுள்ளனர். அதன் மூலம் இப்பகுதி குறித்த விவரத்தை பயங்கரவாதிகள் பெற்றுள்ளனர். ஜம்மு இப்போது நடத்தியுள்ள தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்
மசூத் அசாருக்கு முக்கியத் தொடர்பு: எல்லைக்கு அப்பால் இருந்து வந்த உத்தரவுகளின்படி இந்த பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர். இதில் பயங்கரவாதி மசூத் அசாருக்கு முக்கியத் தொடர்பு உள்ளது. உளவுத் தகவல்கள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சேகரித்து வருகிறது. ஆதாரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு, அறிக்கை தயாரிக்கப்படும். காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான் அதற்கு உரிய விலையைக் கொடுக்கும் நிலை விரைவில் ஏற்படும் என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன் என்றார் நிர்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.