வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: பேரவைத் தலைவர் உள்பட 13 பேருக்கு நோட்டீஸ்

தமிழக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க தமிழக சட்டப்பேரவைத் தலைவர், செயலர், துணை முதல்வர்

Updated On :9 ஜூலை 2018, 7:53 pm

தமிழக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க தமிழக சட்டப்பேரவைத் தலைவர், செயலர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 13 எதிர் மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இது போல, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களான வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரது சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, திமுக கொறடா சக்கரபாணி சார்பில் மூத்த வழக்குரைஞர் அம்ரேந்தர சரண் ஆஜராகி, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக பேரவைத் தலைவர் முடிவு செய்யவில்லை. எனவே, இது தொடர்பாக உயர் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
அப்போது, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் அவர் வாதாடுகையில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எப்படி முடிவு எடுக்க முடியும்? மனுதாரர் இந்த வழக்கில் புகார்தாரராக இல்லை. ஆகையால், மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும்' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக எதிர்மனுதாரர்கள் (தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர், தலைவர் பி. தனபால், ஓ. பன்னீர் செல்வம் உள்பட 13 பேர் ) 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 
பின்னணி: கடந்த ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, எஸ்.பி. சண்முகநாதன், என். மனோரஞ்சிதம், எஸ்.எஸ். சரவணன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கே. மாணிக்கம், ஏ. மனோகரன் உள்ளிட்ட 11 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், இதே கோரிக்கையை வலியுறுத்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்கத்தமிழ்ச் செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி உத்தரவில், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.