அமெரிக்கப் பத்திரிகை நினைவகத்தில் 2 இந்தியர்கள்: கெளரி லங்கேஷ், பெளமிக் இடம்பிடித்தனர்
ஆண்டுதோறும் கொல்லப்படும் பத்திரிகையாளர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம்'' என்னும் அருங்காட்சியகம் கெளரவித்து வருகிறது.


ஆண்டுதோறும் கொல்லப்படும் பத்திரிகையாளர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம்'' என்னும் அருங்காட்சியகம் கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் மற்றும் சுதீப் தத்தா பெளமிக் உள்ளிட்ட 18 பேரை அந்த அருங்காட்சியகம் கெளரவித்துள்ளது.
பத்திரிகையாளர்கள் நினைவகம்'' என்று வகைப்படுத்தப்படும் அந்தப் பட்டியலில் மாலத்தீவைச் சேர்ந்த யாமீன் ரஷீத்தும் இடம்பெற்றுள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ள நியூசியம் அமைப்பு, பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் நியூசியம் வெளியிட்டுள்ள 18 பேர் கொண்ட பட்டியலில் 8 பேர் பெண்கள் ஆவர்.
இந்தியாவின் கெளரி லங்கேஷ், சுதீப் தத்தா பெளமிக் ஆகியோரைக் கெளரவிக்கும் வகையில் நியூசியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜாதிய அமைப்பு மற்றும் ஹிந்து அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தாம் எழுதிய கட்டுரைகளால் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் கெளரி லங்கேஷ்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில், கெளரி லங்கேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தமது சொந்த வாரப் பத்திரிகையான கெளரி லங்கேஷ் பத்திரிகே இதழின் ஆசிரியராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தவர் அவர். பிரதமர் நரேந்திர மோடியின் ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தவர் கெளரி லங்கேஷ்.
அவரது கொலைக்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சுதீப் தத்தா பெளமிக்: திரிபுராவில் காவல் துறையின் ஊழலுக்கு எதிராக புலனாய்வு தகவல்களை சேகரித்து வந்தவர் சுதீப் தத்தா பெளமிக். இவர் உள்ளூர் நாளிதழில் பணியாற்றியவர்.
கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, துணை ராணுவப் படை ஒன்றின் தலைவர் தபன் தேவ்வர்மாவை சந்திக்குமாறு சுதீப்புக்கு அழைப்பு வந்தது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அந்த பாதுகாப்பு அமைப்பின் ஊழல் குறித்தும், தபன் தேவ்வர்மாவின் முறைகேடுகள் குறித்தும் கட்டுரை ஒன்றை சுதீப் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தபன் தேவ்வர்மாவுக்கும், சுதீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தபன் தேவ்வர்மா உத்தரவிட்டதன்படி, அவரது பாதுகாவலர் சுதீப்பை சுட்டுக் கொன்றார்.
தபன் தேவ்வர்மாவின் முறைகேடுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தியதுதான் சுதீப் செய்த ஒரே தவறு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...