

'ஆளுநர்கள் ஆட்சி அதிகார மையங்களாக செயல்படக் கூடாது; மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பணியில் ஆலோசனை (வழிகாட்டி) வழங்குவோராக ஆளுநர்கள் செயல்பட வேண்டும்' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 49ஆவது மாநில ஆளுநர்கள் மாநாட்டில், இதுகுறித்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளுக்குதான், திட்டங்களை உருவாக்குதல், அதை செயல்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் உள்ளன. அந்த மாநில அரசுகளுக்கு, வளர்ச்சி இயந்திரத்தை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு, நல்ல ஆலோசகரும், வழிகாட்டியும், நண்பரும், தத்துவ ஞானியும் தேவைப்படுவர். அந்தப் பணிகளை ஆளுநர்கள் செய்ய வேண்டும்.
மாநில அரசுகளுக்கு தாங்கள் அளிக்கும் ஆலோசனைகள் வாயிலாக, அரசு திட்டங்களின் நலன்கள், அனைத்து தரப்பு மக்களையும் எந்தவித பாகுபாடுமில்லாமல் சென்றடைவதை ஆளுநர்களால் உறுதி செய்ய முடியும். வளர்ச்சித் தொடர்பான விவகாரங்களில், ஆளுநர்கள் தங்களது அறிவுரை, அனுபவம் ஆகியவற்றை பயன்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருமித்த கருத்து எட்டப்படுவது தொடர்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
ஆளுநர் மாளிகைகள், ஆட்சி அதிகார மையங்கள் கிடையாது. வளர்ச்சித் தொடர்பான மாநில அரசுகளின் பணியில் ஆலோசனை வழங்கும் பணியையே ஆளுநர்கள் மேற்கொள்ள வேண்டும். எளிமைக்கு எடுத்துக் காட்டாகவும், கைத் தறி தயாரிப்புகளையும், உள்ளூர் தயாரிப்பு பொருள்களையும் ஊக்குவிப்போராகவும் ஆளுநர்கள் திகழ வேண்டும்.
அரசியல் விவகாரங்கள், பிரச்னைகள் குறித்து மாநில ஆளுநர்கள் தங்களது சொந்த கருத்துகளை வெளியிடவோ, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவோ அல்லது சுட்டுரையில் பதிவுகளை வெளியிடவோ கூடாது. 'சீர்திருத்தம், செயல்பாடு, முன்னேற்றம்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைகளை ஆளுநர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.
மாநில அரசுகளுடன் நல்ல உறவை வைத்திருப்பதுடன், மாநில அரசுகளின் பணிகளான கொள்கைகள் உருவாக்குதல், திட்டங்களைத் தீட்டுதல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்ற வேண்டும். மாநில அரசை வழிநடத்தி செல்வோராக ஆளுநர்கள்இருத்தல் வேண்டும்.
நாட்டின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு நமக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நாம் இழந்து விடக் கூடாது. ஆளுநர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் செய்த தியாகங்களை சுட்டிக்காட்டி, இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மாநிலங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும்படி மாநில அரசுகளை ஆளுநர்கள் வலியுறுத்த வேண்டும். 10ஆம் வகுப்பு வரையிலும் உள்ளூர் மொழிகளை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளை ஆளுநர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். காலனியாதிக்க மனோபாவத்தை ஆளுநர்கள் கைவிட வேண்டும். நமது வரலாறு, பாரம்பரியம், நாகரிகம், மதிப்புகளுக்கு ஆளுநர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.