

மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் தங்களுடைய முக்கியக் கூட்டணிக் கட்சியான சிவசேனையை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி உள்ளது. எனினும், பாஜக மூத்த தலைவர்களை அண்மைகாலமாக சிவசேனை கடுமையாக விமர்சித்து வருகிறது. முக்கியமாக, சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவை விமர்சித்தும் தொடர்ந்து கட்டுரைகள் வெளிவருகின்றன. பிரதமர் மோடியின் பல செயல்பாடுகளையும் சிவசேனை பகிரங்கமாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், பால்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவும், சிவசேனையும் எதிர்த்துப் போட்டியிட்டன. இதில் பாஜக வெற்றி பெற்றது. அதே நேரத்தில், பலூஸ்-கடேகான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனை ஆதரவு அளித்ததால், பாஜக வேறு வழியின்றி தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. இதனால், இரு கட்சிக்கும் இடையே அதிருப்தி உச்சத்தை எட்டியது.
அதே நேரத்தில், கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல்போனது, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தோல்வி ஆகியவை பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டு வருவது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல ஆண்டுகாலமாக தனது நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சியாக இருந்து வந்த சிவசேனையுடன் உறவை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எனவேதான், அமித் ஷா தானாக முன்வந்து உத்தவ் தாக்கரேவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவை அவர் மீண்டும் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமித் ஷாவே முன்வந்து உத்தவ் தாக்கரேவை சந்திக்க நேரம் கேட்டார். எனவே, புதன்கிழமை மாலை அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் சிவசேனைக்கு செல்வாக்கு சிறிதும் குறையவில்லை என்பதை பால்கர் தொகுதி இடைத் தேர்தலில் நிரூபித்தோம். அங்கு நாங்கள் தோற்றாலும் சுமார் 2.5 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். மக்களின் எண்ணத்தைக் கருத்தில் கொண்டும், மகாராஷ்டிர மாநில நலன் கருதியும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவெடுப்பார்' என்றார்.
உத்தவ் தாக்கரேவை அமித் ஷா சந்திக்க இருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கன்திவார், பாஜகவின் சாதனைகளை விளக்கி ஆதரவு கோரும் பிரசாரத்தை அமித் ஷா முன்னெடுத்துள்ளார். அதன் ஒருபகுதியாகவே உத்தவ் தாக்கரேவை சந்திக்கிறார்' என்றார்.
ஆனால், இந்த பிரசாரத் திட்டத்தின் கீழ் கட்சி சாராத பிரபலங்களான கபில் தேவ், பாபா ராம்தேவ் உள்ளிட்டோரை மட்டுமே அமித் ஷா இதுவரை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.