சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்தியில், நெகிழி மாசுபாட்டை பொதுமக்கள் அழித்தொழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சுட்டுரையில் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவில், தூய்மையான, நிலையான பூமியை உருவாக்குவோம் என நாம் கொண்டுள்ள இலக்கை, உலக சுற்றுச்சூழல் நாளில் மீண்டும் உறுதியாக எடுத்துக் கொள்வோம். பசுமையான, நல்லதொரு சுற்றுச்சூழலை நமது பிள்ளைகளுக்கு அளிப்பது நமது கடமையாகும் என்று கூறப்பட்டுள்ளது.
நெகிழியை ஒழிக்க வேண்டும் என உறுதியேற்க வேண்டும் எனவும், ஒருமுறைப் பயன்பாட்டு நெகிழியை ஒழிக்க வேண்டும் என்ற பிரசாரத்தில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்கெடுப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், தூய்மையான, பசுமையான பூமியில் நமது எதிர்கால சந்ததியினர் வாழப்போவதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இது தொடர்பாக கூறுகையில், நாளொன்றுக்கு 9,000 டன் நெகிழிக் கழிவுகள் உருவாக்கப்படுவதாகவும், இதில் 6,000 டன் கழிவுகள் மட்டுமே சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மற்றொரு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் நெகிழி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.