ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் 4,914 கறிவேப்பிலை கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி இந்திய விவசாயி உலக சாதனை படைத்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை பயனுள்ள வகையிலும், மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் கொண்டாட ஷார்ஜாவில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த விவசாயி சுதேஷ் குருவாயூர் முடிவு செய்தார். இதற்காக, பொதுமக்களுக்கு அதிக அளவில் மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்து, மூன்று மாதங்களுக்கு முன்பே கறிவேப்பிலை கன்றுகளை தனது பண்ணையில் வளர்க்கத் தொடங்கினார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஷார்ஜா இந்தியப் பள்ளியில் வைத்து தான் வளர்த்து 4,914 கறிவேப்பிலை கன்றுகளையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த கன்றுகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து சார்ஜாவுக்கு கொண்டு வரப்பட்ட செடியில் இருந்து பெறப்பட்டவையாகும். முன்னதாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கறிவேப்பிலைகளில் அதிக அளவு பூச்சி மருந்து தெளிப்பதால் அவற்றை ஐக்கிய அரபு அமீரகம் தடை செய்திருந்தது.
எனவே, தனது கன்றுகள் அனைத்தையும் ரசாயன உரம், மருந்துகள் எதையும் பயன்படுத்தாமல் சுதேஷ் வளர்த்து வந்தார்.
தான் வசித்து வரும் ஷார்ஜா நகர மக்களுக்கு, தென்னிந்திய சமையலின் பாரம்பரிய பொருளான கறிவேப்பிலையை சுத்தமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறியுள்ளதாக சுதேஷ் தெரிவித்தார்.
முன்னதாக, துபையில் குருநானக் குருத்வாரா சார்பில் கடந்த மார்ச் மாதம் 2,083 மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. சுதேஷின் இந்த மரக்கன்று சாதனையை கல்ஃப் நியூஸ்' உள்ளிட்ட வளைகுடா பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









