நிபா வைரஸ்: உண்மையான ஹீரோக்களை நினைவு கூரும் தருணம் இது

பன்றிக் காய்ச்சல், டெங்கு என புதுப் புது வைரஸ் தாக்குதல்களை அடுத்து நிபா என்ற புதிய வைரஸ் கேரள மாநிலத்தை கடுமையாக தாக்கியது.
நிபா வைரஸ்: உண்மையான ஹீரோக்களை நினைவு கூரும் தருணம் இது
Updated on
2 min read


பன்றிக் காய்ச்சல், டெங்கு என புதுப் புது வைரஸ் தாக்குதல்களை அடுத்து நிபா என்ற புதிய வைரஸ் கேரள மாநிலத்தை கடுமையாக தாக்கியது.

வைரஸ் காய்ச்சல் எப்படி பரவியது, சிகிச்சை என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் அடுத்தடுத்த மரணங்கள் நாட்டையே உலுக்கியது. அண்டை மாநிலங்களிலும் அச்சம் ஏற்பட்டது. வௌவாலில் இருந்து நிபா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததும், உடனடியாக ஏற்படும் மரணங்களும் கேரளவாசிகளை மரண பயத்தில் ஆழ்த்தியிருந்தது.

தீவிர நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு வாரமாக நிபா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்புகளோ, புதிதாக நிபா வைரஸ் தாக்குதலோ ஏற்படாதது மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

நிபா வைரஸ் தாக்குதலின் போது, தங்களது இன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல், தங்களது கடமையை உயிர் போல மதித்து செயல்பட்டவர்கள் அனைவருமே இன்று ஹீரோக்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

கொளுத்தும் வெயிலில், பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு, கையுறை, முகக் கவசத்துடன், உள்ளுக்குள் பயம் இருந்தாலும், கடமையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் முதல், துப்புரவுப் பணியாளர்கள் வரை பலரும் இன்றைய நிஜ ஹீரோக்கள்தான்.

கேரளாவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் ரூபி சஞ்னா தனது அனுபவம் குறித்து கூறுகையில், கடந்த இரண்டு வார கால பணி அனுபவத்தை எனது வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது என்கிறார்.

ஐசியூவில் நிபா வைரஸ் பாதித்து அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த ரூபி கூறியதாவது, "இந்த நோய் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இது வைரல் தொற்று என்று எங்களுக்குக் கூறப்பட்டது. அதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நிபா பாதித்து மருத்துவமனைக்கு வந்த முதல் நோயாளி லினி மிக சாதாரணமாக இருந்தார். நன்றாகவே பேசினார், இயல்பாக நடந்து கொண்டார். ஆனால் திடீரென அவர் நிலைமை மோசமாகி உயிரிழந்துவிட்டார். அதனை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மிகவும் நொறுங்கிப் போனோம். அதே தான், ஜானகி மற்றும் அசோகன் மரணிக்கும் போதும் ஏற்பட்டது. நீங்கள் சிகிச்சை அளிக்கும் நபர் உயிரிழந்துவிட்டால் நிச்சயம் ஒரு பயம் வரும். அதுதான் எங்களுக்கும் ஏற்பட்டது. நர்சிங் பயிலும் மாணவி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டபோது நாங்கள் முற்றிலும் நிலைகுலைந்து போனோம். ஒரு குழந்தையும் கவலைக்கிடமாகக் கொண்டு வரப்பட்டது. உடல் முழுவதும் பாதுகாப்புக் கவசங்களை போட்டுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தோம். தற்போது நாங்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளோம். சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்து வருகிறார்கள்" என்கிறார்.

மருத்துவர் டி.பி. ராஜகோபால் கூறுகையில், நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போது குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரே ஒருவரால் நடந்த சாதனையல்ல. இது ஒரு குழுவின் முயற்சி. அனைத்து ஊழியர்களும் சேர்ந்து நிபா வைரஸுக்கு எதிராகப் போராடினோம். அதிகாரிகள் முதல், துப்புரவுப் பணி செய்யும் ஊழியர்கள் வரை அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து அவசரகாலத்தில் பணியாற்றுவது போல பணியாற்றினார்கள் என்கிறார்.

நிபா வைரஸ் பாதித்தவர்களின் உடல்நிலை மிக விரைவாக மோசமடைவது எங்களுக்கு சவாலாக இருந்தது. மருத்துவமனையில் பணி செய்வது குறித்து எங்கள் குடும்பத்தார் மிகவும் பயந்தனர். என் பணியையே நான் செய்கிறேன் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். இந்த உயிர்க்கொல்லி நோய் பாதித்து குணமடைந்து வருவோரைப் பார்க்கும் போது இதயம் பறப்பது போல உணர்கிறோம் என்கிறார்.

தற்போது கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் நிபா வைரஸ் பாதித்து புதிதாக யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், சிகிச்சை பெற்று வருவோறும் குணமடைந்து வருகின்றனர் என்பதும் ஆறுதலை அளிக்கிறது. நோய் தீவிரமடையும் போது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிடாமல், துணிந்து சேவையாற்றி அவசர நிலையைக் கையாண்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே உண்மையான ஹீரோக்கள்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com