மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷா, வியாழக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
அந்த மாநிலத்தின், புருலியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ஆளும் மம்தா அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அங்கு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 22 இடங்களில் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியினரால் பாஜகவினர் தாக்கப்படுவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசியதாவது:
வன்முறை என்பது வங்காளத்தின் கலாசாரமாக ஒருபோதும் இருந்ததில்லை. ரவீந்திரநாத் தாகூர், பக்கிம் சந்திர சாட்டோபாத்யா உள்ளிட்ட பெரும் தலைவர்கள் வாழ்ந்த மாநிலம் இது. தாகூரின் சங்கீத இசையை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தற்போது வெடிகுண்டுகளின் ஓசையை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களில் பாஜக தொண்டர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது தியாகம் வீண் போகாது. இனி வரும் நாள்களில் மம்தாவை ஆட்சி அதிகாரத்தை விட்டு அகற்றுவோம் என நான் சவால் விடுக்கிறேன்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக இங்கு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தல் என்பது மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடிக்கல்லாக அமையும். 22 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளுடன் மம்தா கைகோப்பது குறித்து எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதைச் செய்வதற்கு முன்பாக, மேற்கு வங்க அரசியல் களம் தம் கையை விட்டு செல்வது குறித்து அவர் கவலைப்பட வேண்டும்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்டுக்கடங்காத வன்முறையை நிகழ்த்தியும்கூட, பல இடங்களில் பாஜக வெற்றி பெறுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை என்றார் அமித் ஷா.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து அமித் ஷா ஆறுதல் கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் பதிலடி
மேற்கு வங்கத்தில் அமித் ஷா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மத்திய பாஜக ஆட்சியின் மீது கவனம் செலுத்துமாறு அமித் ஷா-வை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் பார்தா சாட்டர்ஜி கூறியதாவது:
வெற்று பாத்திரத்தில் அதிக சத்தம் வரும் என்பார்கள். அமித் ஷாவின் பேச்சும் அப்படித்தான் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் அவர்கள் வெற்றி பெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் அடுத்தமுறை தோல்வி அடைவார்கள். இந்நிலையில், 22 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக பகல் கனவு காண வேண்டாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










