

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 5 நாள்கள் சிபிஐ காவலுக்கு அனுப்ப தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் 6-ஆம் தேதி வரை அவர் சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபற்ற போது கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், தாயார் நளினி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த கார்த்தியை, விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். அதைத் தொடந்து அவர் தில்லி அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஒரு நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், கார்த்தி சிதம்பரம் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக தில்லி, சஃப்தார்ஜங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இரவு முழுவதும் அங்கேயே இருந்தார். இதனால், சிபிஐ காவலுக்கு அவரை அழைத்துச் செல்ல இயலவில்லை.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு கார்த்தி சிதம்பரம் வியாழக்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் அரசியல் பழிவாங்கும் செயல்கள் எதுவும் இல்லை.
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பல முறை அவர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். அப்போது அந்நாட்டு வங்கிகளில் அவருக்கு இருந்த கணக்குகளை முடித்துக் கொண்டார். இதன் மூலம் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைளில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவரிடம் விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கார்த்தியை கைது செய்த பிறகு சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்ததால் விசாரணையைத் தொடங்க இயலவில்லை.
வழக்கின் முக்கியத்துவம் கருதி கார்த்தி சிதம்பரத்தை 14 நாள்களுக்கு சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, கார்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டதாவது:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 22 மணி நேரத்துக்கும் அதிகமாக கார்த்தியிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை சிபிஐ தரப்பில் இருந்து எந்த அழைப்பாணையும் வரவில்லை. இதிலிருந்தே கார்த்தியிடம் அவர்கள் விசாரிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது. வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கு கார்த்தி பயணித்ததாக சிபிஐ கூறுகிறது. அது உண்மை என்றால், அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தபோது அதை எதிர்த்து ஏன் சிபிஐ மனு தாக்கல் செய்யவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கார்த்தி சிதம்பரத்தை 5 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.