சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு விவகாரம்: மாணவர்கள், ஆசிரியர்களிடம் தில்லி போலீஸ் தீவிர விசாரணை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தில்லி போலீஸார் மாணவர்கள், பயிற்சி வகுப்பு மையத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வியாழக்கிழமை

News image

தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்கள்.

Updated On :29 மார்ச் 2018, 7:42 pm

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தில்லி போலீஸார் மாணவர்கள், பயிற்சி வகுப்பு மையத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடம் வினாத்தாளும், 12-ம் வகுப்பு பொருளியல் பாடம் வினாத்தாளும் கசித்ததால், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ புதன்கிழமை அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி போலீஸார் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து, வினாத் தாள் எங்கிருந்து முதலில் கசிந்தது, அது எப்படி பகிரப்பட்டது என்பது குறித்து வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
முதல்கட்டமாக 18 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், பயிற்சி வகுப்பு மையத்தின் ஆசிரியர்கள் என 25 பேரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். இதுகுறித்து தில்லி குற்றப்பிரிவு சிறப்பு ஆணையர் ஆர்.பி. உபாத்யாயா கூறுகையில், 'தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் நடந்துள்ளதாக எங்களிடம் தகவல் இல்லை. அப்படி இருந்தால் தில்லிக்கு வெளியேயும் விசாரணை நடத்தப்படும். இதுவரை 25 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளேம். இவர்களுக்கு தேர்வு நடைபெறுவதற்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் வினாத்தாள் கிடைக்கப்பெற்றுள்ளது' என்றார்.
இதேபோல் தில்லி ராஜேந்தர் நகரில் உள்ள பயிற்சி வகுப்பு மையத்தின் உரிமையாளரிடமும் தில்லி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். கணிதம், பொருளியல் ஆகிய பாடங்களுக்கு அவர் வகுப்புகளை எடுத்துள்ளார். 
இந்த முறைகேட்டில் அவர்தான் முக்கிய நபராக கருதப்படுகிறார் என்றும் இந்த முறைகேட்டில் சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இதுவரை எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். 
வினாத் தாள் கசிந்த வாட்ஸ் ஆப் செல்லிடப்பேசி எண்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீஸார், தேர்வு மையங்களுக்கு வினாத் தாள் எப்படி அனுப்பப்பட்டது என்பது குறித்தும் சிபிஎஸ்இயிடம் கேட்டுள்ளனர்.
இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
சிபிஎஸ்இயின் அனைத்து பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்து உள்ளதால், அனைத்து பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை
 சிபிஎஸ்இ வினாத் தாள் கசிவு விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வியாழக்கிழமை செய்துள்ள பதிவில், 'எந்தவித தவறும் செய்யாமல் மீண்டும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எனது வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துகொள்கிறேன். இதற்கு காரணமானவர்கள் மீதும், தவறு செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.