ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம், இடம் மாற்றம்: ரயில்வே அமைச்சகம் தகவல்

மாநகர ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம் மற்றும் இடம் மாற்றவும், சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவும் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம், இடம் மாற்றம்: ரயில்வே அமைச்சகம் தகவல்
Published on
Updated on
1 min read

மாநகர ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம் மற்றும் இடம் மாற்றவும், சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவும் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநகர ரயில் சேவைகளில் உலகளவில் முதன்முறையாக இந்தியாவில் மகளிருக்கு தனிப் பெட்டிகள் ஏற்படுத்தப்பட்டு இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் துவங்கப்பட்ட இச்சேவை பின்நாளில் அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், ரயில் சேவைகளில் மகளிர் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி மாநகர ரயில்களில் உள்ள மகளிர் பெட்டிகள் கடைசியாக இடம்பெற்றிருக்கும். அதை ரயிலின் நடுப்பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல மகளிர் பெட்டிகளுக்கு பிரத்தியேக நிறம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் உலகளவில் மகளிர் நிறமாகக் கருத்தப்படும் பிங்க் நிறம் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும் விதமாக அனைத்து மகளிர் பெட்டிகளுக்கு கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்படவுள்ளது. ஜன்னல்களின் வழியாகவும் யாரும் உள்நுழையாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இவை அனைத்தும் முதலில் மாநகர ரயில் சேவைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் வெளிமாநில ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் பெட்டிகளின் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்பிஎஃப் ஆகியவற்றிலும் அதிகளவில் பெண்களுக்கு இடமளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 3 இடங்களில் மட்டுமே மகளிர் நிர்வாகத்தில் ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அடுத்த 3 ஆண்டுகளில் 100 இடங்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ரயில்வே பொது மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து தலா 10 ரயில் நிலையங்களை அடையாளப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் பெண்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக தனி கழிவறை, ஓய்வு அறை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரயில்வே துறை ஆணையர் அஷ்வானி லோஹானி, ரயில்வே போக்குவரத்து துறை அதிகாரி முகமது ஜம்ஷத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com