முதிர்ச்சியற்ற, பிரபல பின்னணி கொண்ட தலைவரை நாட்டு மக்கள் பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோடி இவ்வாறு கூறினார்.
கர்நாடக மாநிலத்தில், 12-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவை ஆதரித்து சிக்மகளூர், பெங்களூரு அருகேயுள்ள பங்காருபேட்டை ஆகிய இடங்களில் பிரதமர் மோடி புதன்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய அரசியலிலும், கர்நாடகாவிலும் நேற்றைய தினம் சில விஷயங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு நபர் திடீரென தமது முடிவை அறிவித்துவிட்டார். வேறு யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. கூட்டணிக் கட்சிகளின் நிலை குறித்தும் அவர் கவலைப்படவில்லை.
பிரதமர் பதவிக்கான நாற்காலி ஒரு குடும்பத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது, வேறு எவரும் அதில் அமர முடியாது என்று அவர் நினைத்துவிட்டார். இதை அவர்களது மூதாதையரின் உரிமை என நினைக்கிறார்.
காலை முதல் மாலை வரை, உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும், பிரதமர் நாற்காலியில் அமர்வதை பற்றி மட்டுமே அவர் சிந்தித்து கொண்டிருக்கிறார்.
பல தலைவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். ஆனால், நான் பிரதமராவேன் என்று திடீரென அவர் அறிவித்துவிட்டார். காங்கிரஸ் தலைவரின் திமிரை வெளிப்படுத்துவதாக இல்லையா இது? காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதுபோன்ற பிரபலமான, முதிர்ச்சியற்ற தலைவர் அந்தப் பதவிக்கு வருவதை மக்கள் எப்போதாவது ஏற்றுக் கொள்வார்களா?
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அரசின் கட்டுப்பாடு அனைத்தும், அக்கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா காந்தியிடம் இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாடு மக்களிடம் இருக்கிறது.
குறை கூறும் காங்கிரஸ்: கடந்த சில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று வருவதை நீங்கள் அறிவீர்கள். அந்தத் தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறி வருகிறார்கள்.
தோல்விகளை கண்ட பிறகு தேர்தல் ஆணையத்தை அவர்கள் குறை கூற தொடங்கிவிட்டார்கள்.
அவர்களைப் பொருத்தவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறானது, காங்கிரஸ் கட்சி சரியானது. தேர்தல் ஆணையம் தவறானது, காங்கிரஸ் கட்சி சரியானது என்பதே நிலைப்பாடு என்றார் அவர்.
இதேபோல், மத்திய கணக்கு தணிக்கையாளர் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசு அமைப்புகளையும் காங்கிரஸ் கட்சி குறை கூறி வருவதாக மோடி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





