வகை மாற்றம் செய்யப்படாத சாலைகளில் உள்ள சுமார் 1,500 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்குரைஞர் கே. பாலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 28-இல் உத்தரவு பிறப்பித்தது. அதில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் அந்த கடைகளை உடனடியாக மூட வேண்டும்' எனத் தெரிவித்தது. மேலும், வகை மாற்றம் செய்யாமல் இனிமேல்புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, வகை மாற்றம் செய்யப்படாத சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்குரைஞர்கள் எஸ். தனஞ்செயன், கே. பாலு ஆகியோர் ஆஜராகி, "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மீறியுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கு அருகில் மதுக்கடைகளை திறந்தது. அவ்வாறு திறக்கப்பட்ட மதுக்கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன' என்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, "மாநகராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் எல்லைகளுக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை திறப்பதற்கு உரிமம் வழங்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் 2017-இல் உத்தரவிட்டது. இதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ள எஃப்எல்1 முதல் எஃப்எல் 11 வரையிலான உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள வழிப்பாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் 50 மீட்டர் சுற்றளவிலும், பிற பகுதிகளில் 100 மீட்டர் சுற்றளவிலும் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்படாது என மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான தமிழக அரசின் விதியில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளைத் திறப்பதில் தமிழக அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே, வகை மாற்றம் செய்யப்படாத சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வகை மாற்றம் செய்யப்படாத சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. மதுபானக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நிகழாண்டு பிறப்பித்த உத்தரவின்படி, புதிய அறிவிக்கையை 10 நாள்களுக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணை மே 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


