அயோத்தியில் கடவுள் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படுவது உறுதி என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியிட வேண்டும் என்று முடிவு எடுப்பது உச்சநீதிமன்றத்தின் தனி உரிமை ஆகும். அதேநேரத்தில், அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோயில் கட்டப்படும் என்பதை மட்டும் நான் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
அயோத்தியில் ராமஜென்மபூமியில் பாபர் பெயரில் இனி சிறிய கல்லை கூட அவ்வளவு எளிதில் வைக்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் அயோத்தி விவகாரம் குறித்த மனு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் அரசோ, மனுதாரரோ எதையும் செய்ய முடியாது. அயோத்தியில் ராமருக்கு அமைக்கப்பட இருக்கும் சிலையையும், ராமர் கோயில் விவகாரத்தையும் ஒப்பிடக் கூடாது. அந்த இரு விஷயங்களும், தனித்தனி விஷயங்களாகும். அயோத்தி வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். இதே எண்ணத்தைத்தான், ராம பக்தர்கள் ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக, அயோத்தியில் எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு அமைந்ததும், அயோத்தி வளர்ச்சியடைய தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒருபக்கம் கோயில்களுக்கு சென்று மக்களை தவறாக வழிநடத்துகிறார். மறுபக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 2019ஆம் ஆண்டு வரையிலும் அயோத்தி தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். இப்படி வலியுறுத்துவதற்கான காரணம் குறித்து ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








