சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: சிஐசி வலியுறுத்தல்

பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையத்துக்கு மத்திய தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :6 நவம்பர் 2018, 1:04 am IST


பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையத்துக்கு மத்திய தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாலியல் புகாருக்கும், அது தொடர்பான விசாரணைக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்து வருவது, பாலியல் புகார் அளிக்க முனையும் பெண்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், உயரதிகாரிகளால் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 
அந்தப் புகார் குறித்து, ஆணையம் சரியாக விசாரணை நடத்தாததால், தனது புகாரின் நிலை குறித்து அறிய மத்திய தகவல் ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அந்த மனுவின் மீது விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியதாவது:
அரசியலமைப்பு கடமை: குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகப் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரித்து, அந்தப் பெண்கள் நீதி பெற வழிவகை செய்வது தேசிய மகளிர் ஆணையம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கடமையாகும். அவை தங்களின் அரசியலமைப்புக் கடமைகளை ஆற்றாமல் தட்டிக்கழிக்கக் கூடாது.
மனுதாரரின் புகாரை முறையாக விசாரிக்காமல், தேசிய மகளிர் ஆணையம் அதனை தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்துக்கு அனுப்பியுள்ளது. அந்தக் கழகமும், இந்தப் புகார் குறித்த விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்கவில்லை. 
அபராதமும் நஷ்டஈடும்: எனவே, அந்தக் கழகத்தின் பொதுத் தகவல் ஆணையர் அன்ஷுமன் மண்டலுக்கு, அதிகபட்ச அபராதமான ரூ.25,000 விதிக்கப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணுக்குச் சரியான தகவல் அளிக்காதது, அவரை மனரீதியாகத் துன்புறுத்தியது, அவரை அடிக்கடி பணியிடமாற்றம் செய்தது, அவரது வேலை செய்யும் உரிமையைப் பாதித்தது ஆகிய குற்றங்களுக்காக தாமோதர் பள்ளத்தாக்கு கழகம், அந்தப் பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை நஷ்டஈடாக அளிக்க வேண்டும்.
நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஊடகத்துறை, திரைப்படத்துறை, பத்திரிகையாளர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், பாலியல் புகார் அளிப்பதற்கான குழுக்கள் இன்னமும் அமைக்கப்படவில்லை. அத்தகைய நிறுவனங்கள் மீது தேசிய மகளிர் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நம்பிக்கை குலையும்: பாலியல் புகார் அளிப்பதற்கும் அதனை விசாரிப்பதற்கும் இடையே மிகப் பெரிய இடைவேளி உருவாகி வருகிறது. 
இந்த இடைவெளியைக் குறைக்காவிட்டால், மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள் அமைச்சகத்தின் மீதுள்ள பெண்களின் நம்பிக்கை முற்றிலும் குலைந்து போகும். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினாலும், புகார் அளிக்க முன்வர மாட்டார்கள்.
எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், பெண்கள் அனைவரும் சமூக ஊடகங்கள் வழியாகப் புகார் அளிக்கும் நிலையே ஏற்படும். தேசிய மகளிர் ஆணையம் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிவிக்கப்படும் பாலியல் புகார்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.