கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி

மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக படுதோல்வி
கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி


பெங்களூரு: மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. 

மாநிலத்தில் சிவமொக்கா, பல்லாரி, மாண்டியா உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த இடைத்தேர்தல் வெற்றி, 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

மாண்டியா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதி மஜத-விடம் இருந்தது.

பல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2,43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளார்.  ஏற்கனவே, இந்த தொகுதி பாஜக வசம் இருந்தது.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதி பாஜக வசம் இருந்தது.

ராம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், மஜத வேட்பாளரும், முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

ஜமகண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை, காங்கிரஸ் மற்றும் மஜத தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ், மஜத கூட்டணி  வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்த வெற்றியைப் பதிவு செய்யும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சமூக, பொருளாதார வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பார்த்தே மக்கள் வாக்களிக்கின்றனர் என்றும், ராமர்கோவில் போன்ற விவகாரங்களை அரசியலாக்குவது எடுபடாது என அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com