ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சத்தீஸ்கரில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில், 2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

News image

சத்தீஸ்கர் 2-ஆம் கட்ட தேர்தலையொட்டி, ராய்ப்பூரில் உள்ள  விநியோக மையத்தில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்களை  பெற்றுச் செல்லும் அதிகாரிகள்.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில், 2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் நிறைவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை உள்ளடக்கிய அந்த மாநிலத்தில், இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 1,53,85,983 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள்; 76,38,418 பேர் பெண்கள். 940 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
2-ஆம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மத்திய படையினர், காவல்துறையினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்ஸல் பாதிப்பு உள்ள ஜஷ்பூர், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள்: 72 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 72 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மாநில அமைச்சர்கள் 10 பேர், முன்னாள் முதல்வரும், "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' கட்சியின் தலைவருமான  அஜீத் ஜோகி (மர்வாஹி தொகுதி), அவரது மனைவி ரேணு ஜோகி (கோண்டா தொகுதி), மருமகள் ரிச்சா ஜோகி (அகல்டாரா தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரண்தாஸ் மஹந்த் (சக்தி தொகுதி), அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பக்ஹெல் (படான் தொகுதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராக சரண்தாஸ் மஹந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்முனைப் போட்டி: மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2000-இல் சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது. அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்றவர் அஜீத் ஜோகி. அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 3 ஆண்டுகள் வரையே நீடித்தது. அடுத்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ள ரமண் சிங், தற்போது 4-ஆவது முறையாக முதல்வராகும் முனைப்பில் களமிறங்கியுள்ளார். பாஜக - காங்கிரஸ் என இதுவரை இருமுனை போட்டியையே சந்தித்து வந்த சத்தீஸ்கர், இந்த தேர்தலில் மும்முனை போட்டியை எதிர்கொண்டுள்ளது. அதாவது, காங்கிரஸில் இருந்து விலகி, "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' என்ற தனிக்கட்சியை தொடங்கிய அஜீத் ஜோகியுடன், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கைகோத்துள்ளது. இந்த மும்முனைப் போட்டி தங்களுக்கே சாதகம் என்று முதல்வர் ரமண் சிங் கூறிவருகிறார். இதேபோல், 66 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
டிசம்பர் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. 
கடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 49, 39 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
பரஸ்பரம் குற்றச்சாட்டு: சத்தீஸ்கர் தேர்தலை முன்னிட்டு, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ரமண் சிங் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினர் மீது பாஜக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது. அதேவேளையில், விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. மேலும், பனாமா ஆவணங்கள் விவகாரத்தில் ரமண் சிங்கின் மகனுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டியது.
தேர்தல் ஆணையம் விளக்கம்: இதனிடையே, சத்தீஸ்கர் முதல்கட்ட தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களில் குளறுபடி இருந்ததாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியது. ஆனால், அந்த விடியோ போலியானது என்று ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை விளக்கமளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.