பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அவற்றின் விலையை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் மாற்றி அமைக்கும் முறையே தொடரும்; அதனைக் கைவிடும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எரிபொருள் துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதான் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. எனவேதான், மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தபோதும், அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி நாடான ஒபெக் கூட்டமைப்பில் உள்ள சவூதி அரேபிய எண்ணெய் வளத் துறை அமைச்சருடன் பேசினேன். அப்போது, கடந்த ஜூலை மாதம் அவர் எடுத்த முடிவுப்படி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் உற்பத்தியை குறைத்திருப்பதும் சர்வதேச அளவில் விலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும்..
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கிறது என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவேதான், அண்மையில் ஒரு லிட்டருக்கு ரூ.5 வரை விலை குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் இப்போதுள்ள முறையை மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது தொடரும். சர்வதேச விலை நிலவரம் மட்டுமல்லாது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உள்ளூர் விற்பனை விலையை தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா விதித்துள்ள தடை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. எனினும், இரு இந்திய நிறுவனங்கள் ஈரானிடம் நவம்பர் மாதத்திலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதற்காக அமெரிக்கா நம்மீது பொருளாதாரத் தடை விதிக்குமா? இல்லையா? இப்போது உடனடியாகத் தெரியவராது. நாம் நமது தேசிய நலன் கருதியே முடிவுகளை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









