ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பலரும் வங்கிகளில் பணம் வைத்துள்ள நிலையில், வங்கி திவாலானால் மக்களின் பணத்துக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? என்று மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒவ்வொரு வங்கியும் அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளரின் இருப்புத் தொகைக்கு ரூ.1 லட்சம் வரையே காப்பீடு செய்துள்ளன. இதன்படி ஒரு வாடிக்கையாளர் வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு, நடப்புக் கணக்கு என எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும், வங்கி திவால் ஆனால், அவர் எத்தனை லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தாலும், அவருக்கு ரூ.1 லட்சம் மட்டுமே திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் 16.5 கோடி வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. வங்கிகள் திவால் ஆனால், இவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும். இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையை கடந்த 25 ஆண்டுகளாக மாற்றாமல் தொடர்கிறார்கள். இப்போது, பல வங்கிகள் வாராக்கடன் சுமையில் உள்ளன.
திடீரென ஏதாவது ஒரு வங்கி திவால் ஆனால், லட்சக்கணக்கில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான வைப்ப்புத் தொகை காப்பீடு மற்றும் நிதி உறுதியளிப்பு நிறுவனத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதிகள் வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணத்தை வைத்துள்ள பொதுமக்களுக்கு, அவர்கள் பணம் முழுமையாகக் கிடைக்கும் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது. இது பொது நலன் சார்ந்த பிரச்னை இல்லையா? சட்டப்படி மக்களின் பணத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம் இல்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், வைப்புத் தொகை காப்பீடு மற்றும் நிதி உறுதியளிப்பு நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியானது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







