அம்ரபாலி நிறுவன இயக்குநர்களை இரவில் விடுதி அறையில் போலீஸ் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், அம்ரபாலி நிறுவன இயக்குநர்களை இரவில் விடுதி அறையில் போலீஸ் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அம்ரபாலி நிறுவன இயக்குநர்களை இரவில் விடுதி அறையில் போலீஸ் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு 
Published on
Updated on
1 min read

புது தில்லி:  கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், அம்ரபாலி நிறுவன இயக்குநர்களை இரவில் விடுதி அறையில் போலீஸ் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தில்லியைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று முறைகேடு செய்தது மற்றும் திவால் அறிவிப்பு வெளியிட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றததில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக 46 அம்ரபாலி குழும நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அதன் இயக்குநர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.    

இந்த வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் அருண் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக இயக்குநர்கள் மூவரும், நீதிமன்ற உத்தரவின்படி தொடர்புடைய 46 நிறுவனண்களுக்கான ஆவணங்களை தடயவியல் பரிசோதனைக்கு தாக்கல் செய்யவில்லை என்பதால், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன் நிறுவன இயக்குநர்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கைப்பற்றுமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.  

அதன்படி இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

அம்ரபாலி நிறுவன இயக்குநர் அணில் ஷர்மா மற்றும் மற்ற இரு இயக்குநர்களும், சீல் வைக்கப்பட்டுள்ள கட்டடங்களில் உள்ள ஆவணங்களை வகைப்படுத்தும் வேலைகளைத் துவக்கும் பொருட்டு, வெள்ளியன்று காலை 8 மணிக்கு நொய்டா 57-ஆவது செக்டார் காவல் நிலையத்தில்  ஆஜராக வேண்டும். 

அங்கிருந்து நேராக சீல் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று வகைப்படுத்தும் பணியானது துவங்க வேண்டும். காலை முதல் மாலை 6 மணி வரை இந்த பணியானது நடைபெற வேண்டும்.  அப்போது அவர்கள் அலைபேசியைப் பயன்படுத்தலாம் பின்னர் பணி முடிந்ததும் மீண்டும் அவர்கள் மூவரையும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி அறையில் கொண்டு விடப்பட வேண்டும். அங்கு அவர்களுடைய அலைபேசிகள் எதுவும் வழங்கப்படக் கூடாது.      

இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com